வேலையில சின்னது பெருசுன்னு எதுவும் இல்ல.. இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த பி.டெக் மாணவியின் டீ கடை ..
முகப்பு > செய்திகள் > இந்தியாபீகாரை சேர்ந்த பொறியியல் மாணவி ஒருவர் சொந்தமாக டீ கடை ஒன்றை துவங்கியுள்ளார். அந்த கடையின் பெயர் தான் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மாணவர்களிடையே பெரும் தொழிலதிபர்களாக வேண்டும் என்ற கனவு இருந்துவருகிறது. சிறிய ஐடியாவை மூலதனமாக கொண்டு, தொழிலை துவங்கி அதில், மிகப்பெரும் வெற்றியடைந்த பல நபர்களை சமகாலத்தில் சுட்டிக்காட்ட முடியும். இப்படி, தொழிலுக்கு ஏற்ற இடம், அது சென்றடைய வேண்டிய மக்கள் யார்? என பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்கு பிறகு துவங்கப்படும் இத்தகைய நிறுவனங்கள் குறிப்பிட்ட சில ஆண்டுகளிலேயே பெரும் வளர்ச்சியை எட்டிப்பிடிக்கின்றன. இதனாலேயே புதிய தொழில் வாய்ப்புகள் குறித்து, மாணவர்கள் அதிகளவில் ஆராய்ந்து வருகின்றனர். அந்த வகையில் பீகாரை சேர்ந்த மாணவி ஒருவர் தன்னுடைய டீ கடையை துவங்கியுள்ளார்.
பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் வர்த்திகா சிங். சிறுவயதில் இருந்து சொந்தமாக தொழில் துவங்க வேண்டும் என்ற கனவுடன் வளர்ந்த வர்த்திகா தற்போது ஹரியானா மாநிலம் பரீதாபாத்தில் பிடெக் படித்து வருகிறார். இருப்பினும் தன்னுடைய கனவுகளை நிறைவேற்ற காத்திருக்க முடியாத வர்த்திகா தற்போது தனது சொந்த டீ கடையை துவங்கியுள்ளார். பரிதாபாத்தில் இவர் அமைத்துள்ள கடைக்கு B.Tech Chaiwali எனப் பெயர்சூட்டியுள்ளார். இதனிடையே இவருடைய கடைக்கு மக்களிடத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதனிடையே வர்த்திகா சிங் தன்னை அறிமுகம் செய்துகொள்ளும் வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில், "என் பெயர் வர்த்திகா சிங். நான் பீகாரை சேர்ந்தவள். தற்போது பரீதாபாத்தில் பிடெக் படித்துவருகிறேன். என்னுடைய நெடுநாள் கனவான தொழில் துவங்க வேண்டும் என்ற ஆசை தற்போது நிறைவேறியுள்ளது. என்னுடைய கடைக்கு B.Tech Chaiwali எனப் பெயர் வைத்திருக்கிறேன்" என்கிறார்.
பரீதாபாத்தின் கிரீன்பீல்டு பகுதியில் வர்த்திகாவின் கடை இருக்கிறது. தினந்தோறும் மாலை 5.30 மணிமுதல் இரவு 9 மணிவரையில் கடையை நடத்திவரும் இவர் சாதாரண டீயை 10 ரூபாய்க்கும், லெமன் டீயை 20 ரூபாய்க்கும் விற்பனை செய்துவருகிறார். இவருடைய முயற்சிக்கு பலரும் பாராட்டும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்