"இந்த வருஷம் எங்க அக்கா எங்ககூட இல்ல'.. ரக்ஷாபந்தனில் ஊரையே திரும்பி பார்க்க வச்ச பாசக்கார சகோதரர்கள்.. கலங்க வைக்கும் பின்னணி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திர மாநிலத்தில் சகோதரி உயிரிழந்த நிலையில், அவருக்கு சிலை செய்து அதற்கு ராக்கி கட்டியிருக்கின்றனர் இரண்டு பாசமிகு சகோதரர்கள். இது பலரையும் கண்கலங்க செய்திருக்கிறது.
ரக்ஷாபந்தன்
இந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான பண்டிகைகள் கொண்டாப்படுக்கின்றன. அந்த வகையில் வட இந்தியாவில் மிகவும் பிரசித்திபெற்ற பண்டிகைகளில் ஒன்று தான் இந்த ரக்ஷாபந்தன். இந்த நாளில் பெண்கள் தங்களது சகோதரர்களுக்கு வண்ண கயிறை கையில் கட்டுகின்றனர். இதனை ராக்கி என்று அழைக்கின்றனர். மேலும், மனதுக்கு நெருக்கமான ஆண்களை தங்களது சகோதரர்களாக பாவித்து அவர்களது கையிலும் இந்த ராக்கியை பெண்கள் கட்டுகின்றனர். இதனிடையே நேற்று முன் தினம் இந்தியா முழுவதும் ரக்ஷாபந்தன் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது.
சோகம்
ஆந்திர பிரதேசத்தின் காக்கிநாடா மாவட்டம் கத்திபூடி கிராமத்தை சேர்ந்தவர் இளம்பெண் மணி. இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். ஒவ்வொரு ரக்ஷாபந்தன் நாளிலும் தனது மூத்த சகோதரர் சிவா, மூத்த சகோதரி வரலட்சுமி மற்றும் இளைய சகோதரர் ராஜு ஆகியோருடன் மணி பண்டிகையை கொண்டாடி மகிழ்வார். ஆனால், துரதிஷ்டவசமாக 7 மாதங்களுக்கு முன்னர் நிகழ்ந்த சாலை விபத்தில் மணி உயிரிழந்திருக்கிறார். இதனால் அவரது குடும்பமே சோகத்தில் மூழ்கியது.
திருவிழா
இந்நிலையில் தங்களது சகோதரி மணிக்கு சிலை எடுக்க முடிவெடுத்திருக்கிறார்கள் அவரது சகோதரர்கள். அவரை போலவே தத்ரூபமாக சிலை செய்யப்பட்டிருக்கிறது. எப்போதும் போல ரக்ஷாபந்தனை தனது சகோதரியுடன் கொண்டாட நினைத்த சகோதரர்கள் மணியின் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்றிருக்கின்றனர். பட்டாசு கொளுத்தி அன்றைய நாளை கொண்டாடியிருக்கிறார்கள். மேலும், தங்களது சகோதரி மணியின் சிலைக்கு ராக்கி கட்டிய சகோதரர்கள் அன்றைய தினம் ஊருக்கே விருந்து அளித்திருக்கிறார்கள். இதனால் அந்த கிராம மக்கள் நெகிழ்ந்து போயினர்.
கோரிக்கை
இதுகுறித்து பேசிய மணியின் இளைய சகோதரர் ராஜு,"என்னுடைய அக்கா மணி மிகுந்த பாசம் கொண்டவர். யாருக்கும் சிறு தீங்குகூட நினைக்காதவர். அவருடைய திருமண வாழ்க்கையும் சிறப்பாக அமைந்தது. ஆனால், ஒரு சாலை விபத்தில் அவர் மரணமடைந்துவிட்டார். தயவு செய்து தலைக்கவசம் அணியுங்கள். அது உங்களுடைய உயிரை காக்கும்" என கண்ணீருடன் கூறினார்.
விபத்தில் உயிரிழந்த சகோதரிக்கு சிலைவடித்து ரக்ஷாபந்தணை கொண்டாடிய சகோதரர்களின் செயல் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.
மற்ற செய்திகள்