ஒட்டல்களில் கத்தரிக்காய்க்கு '144 தடை' போட்ட உரிமையாளர்கள்... உணவு பிரியர்கள் ஷாக்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபல உணவகங்களில் மெனு கார்டில் இருந்து கத்தரிக்காய் உணவு பதார்த்தங்கள் நீக்கப்பட்டுள்ளன. இது நம்ம ஊரிலா என நீங்கள் யோசிக்க வேண்டாம். கத்தரிக்காய் பிரதானமாகப் பயன்படுத்தப்படும் கர்நாடகா மாநிலத்தில் தான் இந்த நிலை.
கர்நாடகா மாநிலத்தின் முக்கியமான காய்கறிகளுள் ஒன்றாக இருப்பது கத்தரிக்காய். சைவ பிரியர்கள், அசைவ பிரியர்கள் என அனைவருக்குமே பிடித்தமான ஒரு காய் ஆக இருப்பது கத்தரிக்காய். கர்நாடகா மாநிலத்தில் வாங்கிபாத், யெங்காய் ஆகிய உணவு ஐட்டங்கள் கத்தரிக்காய் கொண்டு செய்யப்படுவது ஆகும்.
கர்நாடகாவின் வட பகுதிகளில் எல்லாம் கத்தரிக்காய் தான் பலரது வீடுகளிலும் அன்றாட உணவு ஆக உள்ளது. இந்த சூழலில் தான் கர்நாடகாவில் கத்தரிக்காயின் விலை ராக்கெட் வேகத்தில் எகிறி உள்ளது. மொத்த விலை சந்தைகளிலேயே கத்தரிக்காயின் விலை கிலோ 100 ரூபாய் என விற்கிறது. இதனால், கர்நாடகாவில் கத்தரிக்காய் பிரியர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கத்தரிக்காய் மட்டுமல்லாது முட்டைகோஸ், குடை மிளகாய் எனப் பல காய்கறிகளின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. மழைக்காலம் என்றாலே விளைச்சல் குறைந்து காய்கறிகளின் வரத்தும் சந்தைகளின் குறைந்துவிடும். இதன் காரணமாகவே காய் கறிகளின் விலை மழைக் காலங்களில் அதிகரித்துவிடுகிறது.
மொத்த விலை சந்தைகளில் சுமார் 100 ரூபாயை தாண்டிச் சென்ற கத்தரிக்காயின் விலை சில்லரை விற்பனையில் கிலோ 200 முதல் 220 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வீடுகளில் இல்லத்தரசிகள் முதல் உணவகங்கள் வரையில் கத்தரிக்காயை மக்கள் தவிர்க்கும்படி ஆகி உள்ளது. கல்யாண வீடுகளில் கூட கத்தரிக்காய் ஐட்டங்களை மக்கள் தவிர்க்கத் தொடங்கி உள்ளனர்.
கர்நாடகாவின் முக்கிய நகரங்களில் உள்ள பல உணவகங்கள் கத்தரிக்காயை முற்றிலுமாகத் தவிர்த்து உள்ளன. இதனால் பல கத்தரிக்காய் பிரியர்களும் வேதனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்