"பயமா இருக்குப்பா..!"... இந்தியாவையே உலுக்கிய "விஸ்மயா" வழக்கு கடந்து வந்த பாதை.!
முகப்பு > செய்திகள் > இந்தியாநாட்டையே உலுக்கிய விஸ்மயா வழக்கில், அவரது கணவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அளித்திருக்கிறது கொல்லம் கீழமை நீதிமன்றம்.
Also Read | தொண்டையில் சிக்கிய உணவு.. துடிச்சுப்போன காவலர்.. உயிரை காப்பாற்றிய சப் இன்ஸ்பெக்டர்..
வரதட்சணை
கேரளாவைச் சேர்ந்த ஆயுர்வேத மாணவியான விஸ்மயா என்ற இளம்பெண்ணிற்கும் மோட்டார் வாகன உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த கிரண் குமார் என்பவருக்கும் கடந்த மே 31, 2020-ல் திருமணம் நடைபெற்றிருக்கிறது. கிரண் குமாருக்கு 1 ஏக்கர் மதிப்பிலான ரப்பர் தோட்ட நிலம், 100 சவரன் (800 கிராம்) நகை, ஒரு கார் இவற்றுடன் சில லட்சங்கள் ரொக்கம் ஆகியவை வரதட்சணையாக கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், தனக்கு வழங்கப்பட கார் மாடல் பிடிக்கவில்லை எனவும், தனக்கு வேறு கார் வேண்டும் என கிரண் கூறியிருக்கிறார். திருமணமான 9-வது நாளில் விஸ்மயா தாக்கப்பட்டிருக்கிறார். அப்போது தன் தந்தையிடம் அவர் பேசிய ஆடியோவொன்று வெளியானது. அந்த ஆடியோவில், “எனக்கு இங்க இருக்கவே பயமாருக்குப்பா. இதுக்கு மேல் என்னால் எதையும் பொறுத்துக்கொள்ள முடியாது. எனக்கு நம்ம வீட்டுக்கே திரும்பி வரணும்” என்று கூறியிருக்கிறார். அதற்கு அவர் தந்தை, விஸ்மயாவை சமாதானப்படுத்துகின்றார். “நீ நிச்சயம் நம்ம வீட்டுக்கு வரலாம். அதேநேரம், நினைவில் வைச்சுக்கோ.... கிரண் இதையெல்லாம் கோவத்தினால் செய்கிறார். அவ்வளவுதான். இது வாழ்வில் எல்லோருக்கும் நடப்பதுதான். இதுதான் வாழ்க்கை” என சமாதானப்படுத்துகிறார்.
அடைக்கலம்
கடந்த 2020 ஆம் ஆண்டு மே 9 ஆம் தேதி, விஸ்மயாவின் 100 சவரன் நகையில் சுமார் 42 சவரன் நகையை தனது சொந்த லாக்கருக்கு மாற்றியிருக்கிறார் கிரண். அதன் பிறகு, ஆகஸ்ட் 29-ம் தேதி தனது மனைவி விஸ்மயாவை ஷாப்பிங் கூட்டிச் சென்றுள்ளார் கிரண். அப்போது இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் காரிலிருந்து விஸ்மயாவை இறக்கிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார் கிரண். இதனையடுத்து அருகில் இருந்த வீட்டினர் விஸ்மயாவுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளனர். அதன்பிறகு மீண்டும் கிரண் வீட்டுக்கே சென்றுள்ளார் விஸ்மயா.
வழக்கு பதிவு
இந்நிலையில், ஜனவரி 3, 2021-ல் விஸ்மயா வீட்டிற்கு சென்றுள்ளார் கிரண். அப்போது கூடுதல் வரதட்சணை கேட்டு கிரண் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். இதனால் எழுந்த சண்டையில் விஸ்மயாவின் சகோதரர் விஜித்தை கடுமையாக தாக்கியுள்ளார் கிரண். இதனால் விஜித்தின் கை எலும்புகள் முறிந்ததாக, மருத்துவ பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, ஜனவரி 3-ம் தேதி, கிரண் குறித்து கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த சந்திரமங்கலம் காவல்நிலையத்தில் விஸ்மயாவின் குடும்பத்தினர் புகார் அளித்திருக்கின்றனர். ஆனால், காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டனர்.
விபரீத முடிவு
விஸ்மயாவின் போனை உடைத்தெறிந்து அவரை பிறரிடம் பேசவிடாமல் கிரண் தடுத்ததாக போலீஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜூன் 19 ஆம் தேதி தனது உறவினர் ஒருவரிடம் வாட்சப்பில் பேசிய விஸ்மயா தான் தாக்கப்பட்ட விதம் குறித்தும் அதனால் ஏற்பட்ட காயங்கள் குறித்தும் கூறியுள்ளார். அதன்பிறகு ஜூன் 21 ஆம் தேதி, விஸ்மயா தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.
இதனை தொடர்ந்து அன்று இரவே, காவல்துறையில் சரணடைந்தார் கிரண். இந்திய அரசியலமைப்பு சட்ட 304 பி (வரதட்சணை கொடுமையால் மரணம்), 498 ஏ (கணவர் அல்லது உறவினரால் கொடுமைப்படுத்தப்படுவது), 306 (தற்கொலைக்கு தூண்டுதல்), 506 (மிரட்டல் விடுவது) உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் கிரண் மீது வழக்கு பதியப்பட்டது.
தீர்ப்பு
இந்த வழக்கின் போது 42 சாட்சியங்கள், 108 ஆவணங்கள் மற்றும் விஸ்மயாவின் செல்போன் உரையாடல்கள் உள்ளிட்டவை விசாரணை அறிக்கையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கு குறித்து, போலீசாரும் 507 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தனர். ஒரு வருடமாக நடைபெற்றுவந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பை வெளியிட்டார் கொல்லம் கீழமை நீதிமன்ற நீதிபதி சுஜித். அதில், கிரண் குமாருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், அவருக்கு 12.50 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அந்த அபராதத்தில் இருந்து, 2 லட்சம் ரூபாயை விஸ்மயாவின் பெற்றோருக்கு வழங்கவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
இந்த தீர்ப்பை விஸ்மயாவின் பெற்றோர் வரவேற்றுள்ளனர். தங்களின் மகளின் மரணம் தொடர்பாக உரிய முறையில் விசாரணை நடந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். விஸ்மயாவின் சகோதரர் விஜித் நீதிமன்ற வளாகத்தில் அளித்த பேட்டியில், `இந்த தீர்ப்பு எனது சகோதரியை திருப்பிக் கொண்டு வராதுதான். ஆனால் விஸ்மயா போன்ற இன்னொரு சகோதரிக்கு அப்படியொரு துன்பம் வராமல் இருக்க, இத்தீர்ப்பு உதவும்" என உருக்கமாக குறிப்பிட்டார்.
தீர்வல்ல
எந்த ஒரு பிரச்சினைக்கும் உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வாகாது. மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, எதிர்மறை எண்ணம் எழுந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவும்.
மாநில உதவிமையம் : 104 .
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
Also Read | அசால்ட்டா கடசி ஓவரில் பினிஷ் செய்த மில்லர் … மேட்ச் முடிஞ்சதும் போட்ட வைரல் Tweet
மற்ற செய்திகள்