செவ்வாய்க்கிழமையா 'இருந்தாலும்' செம சேல்ஸ்... 'பிரியாணி' சாப்பிட்டு தோல்வியைக் 'கொண்டாடிய' மக்கள்... என்ன காரணமுன்னு பாருங்க!
முகப்பு > செய்திகள் > இந்தியாநேற்றைய தினம் பிரியாணி விற்பனை படு அமோகமாக இருந்ததாக, டெல்லியில் உள்ள பிரியாணி கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றியைப் பெற்றது. காங்கிரஸ், பாஜக கட்சிகள் படுதோல்வி அடைந்தன. தேர்தலுக்கு முன் பாஜக கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக ஷாகீன் பாக்கில் போராடுகிறவர்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பிரியாணி அனுப்புகிறார் என கூறியிருந்தார். இதை பின்பற்றி பாஜகவும் அவ்வாறே பிரச்சாரம் செய்தது.
ஆனால் இந்த பிரச்சாரத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால் எந்தவித பதிலடியும் கொடுக்கவில்லை. ஷாகீன் பாக் போராட்டக்காரர்களை அவர் நேரில் சந்திக்கவும் இல்லை. இந்த குற்றச்சாட்டை அமைதியாகவே கடந்து சென்றார். அதற்கு பலனளிப்பது போல 3-வது முறையாக டெல்லி மக்கள் ஆம் ஆத்மி கட்சியை வெற்றிபெற வைத்துள்ளனர். இதையடுத்து நேற்று டெல்லி முழுவதும் பிரியாணி விற்பனை படு அமோகமாக இருந்ததாம். பாஜகவின் இந்த தோல்வியை எதிர்ப்பாளர்கள் பிரியாணி சாப்பிட்டு கொண்டாடியதாக கூறப்படுகிறது.
குறிப்பாக நேற்று மாலை 6 மணி முதல் இரவு 10.30 மணி வரை ஏகப்பட்ட பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு ஊக்கமளிப்பது போல சில கடைகளில் 1 பிரியாணி வாங்கினால் இன்னொரு பிரியாணி இலவசம் என்று சூப்பரான ஆபர்களையும் அறிவிக்க ஜெட் வேகத்தில் பிரியாணி விற்பனை அமோகமாக களைகட்டி இருக்கிறது. நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமையாக இருந்தாலும் கூட விற்பனையில் எந்தவித குறைவும் இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.