"மாட்டுக்கு வைத்தியம் பார்க்கனும்னு கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணிவச்சிட்டாங்க சார்".. போலீசில் கதறிய கால்நடை டாக்டர்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபீஹார் மாநிலத்தில் கால்நடை மருத்துவர் ஒருவரை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்துவைத்த நபர்களை வலைவீசி தேடிவருகிறது காவல்துறை.
சீக்கிரம் வாங்க
பீகாரின் பேகுசராய் பகுதியை சேர்ந்த ஒருவர் தனது மகனை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதே பகுதியில் கால்நடை மருத்துவராக பணிபுரிந்துவரும் இளைஞரை கடந்த செவ்வாய்க்கிழமை மூன்று பேர் சந்திக்க வந்திருக்கின்றனர். அப்போது தங்களது வீட்டில் வளர்ந்துவரும் ஆடு மற்றும் மாடுகளுக்கு உடல்நிலை சரியில்லை எனவும் ஆகவே, சீக்கிரம் வந்து மருத்துவம் பார்க்குமாறு அவர்கள் கூறியுள்ளனர்.
இதனை நம்பி அவர்களுடன் கிளம்பியிருக்கிறார் அந்த டாக்டர். ஆனால், அவர்களது திட்டம் பற்றி வெகு சீக்கிரத்திலேயே அந்த இளைஞருக்கு தெரிந்துவிட்டது. கால்நடை மருத்துவரை ஒரு திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி பெண்ணுடன் திருமணம் செய்து வைத்திருக்கிறது அந்த கும்பல்.
போலீசில் புகார்
தனது மகன் வீடு திரும்பாததால் கவலையடைந்த கால்நடை மருத்துவரான இளைஞரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் தான் இந்த திருமணம் பற்றி தெரியவந்திருக்கிறது.
இதுகுறித்து பேசிய பெகுசராய் எஸ்பி யோகேந்திர குமார்," இந்த சம்பவம் குறித்து இளைஞரின் தந்தை (கால்நடை மருத்துவர்) காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு எஸ்.எச்.ஓ மற்றும் பிற அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
வினோத திருமணம்
மணமகன் கடத்தல் அல்லது 'பகத்வா விவா' என்பது பீகார், ஜார்கண்ட் மற்றும் உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளில் பரவலாக நடைபெறும் நிகழ்வாக இருக்கிறது. சமூக அந்தஸ்து பெற்ற மணப்பெண்களின் வீட்டார், மணமகனை கடத்திவந்து கட்டாய திருமணம் செய்து வைக்கிறார்கள். பல ஆண்டுகளாக இந்த பகுதியில் இந்த வழக்கம் இருந்துவருகிறது.
சமீபத்தில் தனியார் ஸ்டீல் ஆலையில் ஜூனியர் மேனேஜராக பணிபுரிந்துவந்த 29 வயதான வினோத் குமார் என்பவரை மணப்பெண்ணின் வீட்டார் கடத்திச் சென்று இதேபோல திருமணம் செய்து வைத்தனர். திருமணத்தை நிறுத்துமாறு கண்ணீருடன் குமார் கோரிக்கை வைத்த வீடியோ அப்போது வைரலானது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்