10 'தூக்குக்கயிறு' அர்ஜெண்டா வேணும்.. சிறைக்கு 'பறந்த' உத்தரவு.. நிர்பயா குற்றவாளிகளுக்கானதா?
முகப்பு > செய்திகள் > இந்தியாநாடு முழுவதும் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. பிரியங்கா ரெட்டி வழக்கில் போலீசார் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்ததற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது.
அரசியல்வாதிகள், பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்ட பலரும் போலீசாரின் இந்த நடவடிக்கையை வெளிப்படையாக வரவேற்று இருந்தனர். இதேபோல் நிர்பயா குற்றவாளிகள், உன்னாவ் பெண்ணை எரித்த 5 பேர் ஆகியோருக்கும் தூக்குத்தண்டனை வழங்க வேண்டுமே என நாடு முழுவதும் குரல்கள் எழுந்துள்ளன.
இந்தநிலையில் டிசம்பர் 14-ம் தேதிக்குள் 10 தூக்குக்கயிறுகள் வேண்டும் என பீகாரில் உள்ள பக்சார் சிறைக்கு உத்தரவு பறந்துள்ளது. பீகார் தவிர மேலும் சில சிறைகளில் தூக்குக்கயிறு தயாரிக்கப்பட்டாலும் பீகார் சிறை தூக்குக்கயிறு தயாரிப்பில் ஆரம்பம் முதலே ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து பக்சார் சிறையின் கண்காணிப்பாளர் விஜயகுமார் அரோரா,'' 10 தூக்குக்கயிறுகள் தயாரிக்குமாறு உத்தரவு பிறப்பித்தனர். தற்போது அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்,'' என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிறை அதிகாரிகள் மேலும் கூறுகையில்,''ஒரு தூக்குக்கயிறு தயாரிக்க 3 முதல் 4 நாள்கள் தேவைப்படும். முன்னதாக இதன் விலை 1,725 ரூபாயாக இருந்தது, தற்போது பொருள்களின் விலை உயர்ந்துள்ளதால் தூக்குக் கயிற்றின் விலையும் அதிகமாகிவிட்டது. தூக்கிலிடப்பட உள்ள நபரைவிட 1.6 மடங்கு அதிகமாக கயிற்றின் உயரம் இருக்க வேண்டும். முன்னதாக மொத்த இந்தியாவிலும் இந்தச் சிறையில் மட்டுமே தூக்குக்கயிறு தயாரிக்கப்பட்டது. ஆனால், தற்போது மேலும் சில சிறைகளில் கயிறு தயாரிக்கப்படுகிறது,''எனத் தெரிவித்துள்ளனர்.
நிர்பயா வழக்கின் குற்றவாளி ஒருவர் அண்மையில் தனது கருணை மனுவை வாபஸ் பெற்ற நிலையில், பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்தததாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் அப்சல் குருவுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.