தொடர் தோல்விகளை சந்திக்கும் காங்கிரஸ்... பீகாரில் பொய்த்துப்போன தேர்தல் வியூகம்!.. என்ன காரணம்?.. 'அதிர்ச்சி' பின்னணி!
முகப்பு > செய்திகள் > இந்தியாபீகார் தேர்தலில் 70 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, வெறும் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று மோசமான தோல்வியை தழுவியுள்ளது.
காங்கிரஸின் தோல்வி முழுக்க முழுக்க பாஜகவுக்கு சாதகமாக மாறியுள்ளது. பீகாரில் காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில் எல்லாம் பாஜக கூட்டணி எளிதாக வெற்றியை ருசித்துள்ளது.
பீகாரில் தேஜஸ்வி யாதவிற்கு இருந்த மிகப்பெரிய வரவேற்பு, அவரின் முதல்வர் கனவு இரண்டையும் காங்கிரஸின் மோசமான தோல்வி துடைத்து எறிந்துவிட்டது.
காங்கிரஸின் தோல்வியை விடவும், அது பாஜக கூட்டணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த செயல் தற்போது விவாதத்தின் புள்ளியாக மாறியுள்ளது. காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிக எளிதான வெற்றியை சுவைத்தன.
தற்போதைய காங்கிரஸ் கட்சியின் மோசமான செயல்திறன் நிச்சயமாக அதன் தலைமை குறித்த கேள்வியை மீண்டும் முன்னிலைக்கு கொண்டு வரும். சோனியாகாந்தி, ராகுல்காந்தியின் தலைமையின் கீழ் கட்சியின் செயல்பாட்டை 23 தலைவர்கள் குழு கேள்வி எழுப்பிய பிறகு காங்கிரஸ் சந்திக்கும் முதல் தேர்தல் இதுதான்.
கொரோனா நெருக்கடியில் அதிகளவு பாதிக்கப்பட்ட மாநிலம் பீகார். பீகாரைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், பல மாநிலங்களில் இருந்து நடந்தே வீடு திரும்பினர். இந்த அதிருப்தியை எல்லாம் வாக்குகளாக மாற்ற காங்கிரஸ் தவறிவிட்டது.
காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்த சீட்களில் ராஷ்டிரிய ஜனதா தளமே முழுமையாக போட்டியிட்டிருந்தாலோ அல்லது சிறிய கட்சிகளுக்கோ பகிர்ந்தளித்திருந்தால் கூட மெகா கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கும் என்று ஆர்ஜேடி கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
இந்த தேர்தலில் பீகாரில் மட்டுமின்றி 9 மாநில இடைத்தேர்தல்களிலும் காங்கிரஸ் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்வியானது இன்னும் 6 மாதங்களில் வெற்றி பெறும் முனைப்புடன் தேர்தலை சந்திக்கவிருக்கும் அசாம், கேரள மாநில காங்கிரஸ் தொண்டர்களை சுணக்கமுற செய்யும்.
தற்போது முடிந்த பீகார் தேர்தலில் 70 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, வெறும் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 2015 ஆம் ஆண்டு தேர்தலில் ஜேடியு மற்றும் ஆர்ஜேடி கூட்டணியில் இருந்த காங்கிரஸ் 41 தொகுதிகளில் போட்டியிட்டு 27 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.
பீகார் தேர்தலுக்காக காங்கிரஸ் தனது வேட்பாளர்களின் முதல் பட்டியலை அறிவித்தபோதே, முறையற்ற தேர்வு மற்றும் தகுதியற்ற நபர்களுக்கு சீட் வழங்கப்பட்டது என்று உட்கட்சியிலேயே குற்றச்சாட்டுகள் எழுந்தன.
மேலும், காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் கொடுக்கப்பட்டதால் பல சிறிய கட்சிகளுக்கும் உரிய இடங்கள் கொடுக்க இயலாத சூழல் உருவானது, ஓவைசி கட்சி, வீகாசீல் உட்பட இந்த சிறிய கட்சிகள் பெரிய அளவில் மகா கூட்டணியின் வெற்றியை பாதித்துள்ளது.
நாங்கள் முற்றிலும் தேஜஷ்வி யாதவ் மற்றும் முஸ்லீம்-யாதவ் கலவையை சார்ந்துதான் தேர்தலை சந்தித்தோம். எங்களிடம் ஒரு வலுவான உள்ளூர் தலைவரோ அல்லது எங்களின் சொந்தமான சக்திவாய்ந்த வெற்றி கதைகளோ இல்லை என்று பீகாரைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் கிஷோர் ஜா தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசம் ஹத்ராஸ் சம்பத்தில் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு ஆதரவாக மிகப்பெரிய அலை உருவானதுபோன்ற தோற்றம் கட்டமைக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு சில வாரங்களிலேயே நடந்த பீகார் தேர்தல் மற்றும் 9 மாநில இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது.
அப்படியானால் எந்த இடத்தில் சறுக்குகிறோம் என்று இப்போதேனும் காங்கிரஸ் தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் கட்சி இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
மற்ற செய்திகள்