'உங்க இஷ்டத்துக்கு எல்லாம் என்னால இருக்க முடியாது...' 'ஒத்துக்கிட்டா இருங்க, இல்லனா தேவையே இல்ல...' 'அதிரடி காட்டிய இளம்பெண்...' - போலீசார் பாராட்டு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாபடிக்க விரும்பிய பெண்ணை கிராம பஞ்சாயத்து முறை மூலம் அனுமதி பெற்று தந்த சம்பவம் தங்களின் பணி சுமையை குறைக்கும் வகையில் உள்ளது என கூறியுள்ளனர் காவல்துறையினர்.
பீகார் மாநிலம், பாகல்பூர் மாவட்டம் கங்கானியா பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோர்காட் கிராமத்தைச் சேர்ந்தவர் சுனில் குமார். சுனில் குமாருக்கும், ஜஹாங்கிரா கிராமத்தைச் சேர்ந்த நேகா குமாரிக்கும் (19) கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் 12-ம் வகுப்பு படித்து முடித்துள்ள நேகா, திருமணமான பிறகு தன் கணவரிடம் தொடர்ந்து படிக்க விருப்பம் உள்ளதாகவும், தான் ஐடிஐ படிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் நேகாவின் கணவரும் அவரது குடும்பத்தினரும் ஏற்கவில்லை.
இதனால் வருத்தமடைந்த நேகா, தன் கணவரின் வீட்டை விட்டு வெளியேறி பாட்னா சென்றுள்ளார். இதுகுறித்து அறிந்த நேகாவின் தந்தை குருதேவ் பண்டிட், தன் மகள் கணவர் வீட்டில் இல்லாததால் கடத்தப்பட்டிருக்கலாம் என சுல்தான்கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தன் தந்தையின் காவல் நிலைய புகாரை அறிந்த நேகா, கங்கானியா பஞ்சாயத்து தலைவர் தாமோதர் சவுத்ரியை சந்தித்து முறையிட்டுள்ளார்.
இதன்காரணமாக இரு வீட்டரையும் கிராம பஞ்சாயத்துக்கு வருமாறு நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
அந்த கூட்டத்தில் நேகாவோ, 'என்னை கட்டாயப்படுத்தி தான் இந்த திருமணம் நடைபெற்றது. நான் ஐடிஐ படிப்பை முடித்துவிட்டு வேலைக்குச் செல்ல விரும்புகிறேன். ஆனால் என்னுடைய இந்த கனவை என் கணவரும் அவரது குடும்பத்தாரும் மறுக்கிறார்கள். இதனால் கணவரை பிரிய அனுமதி வேண்டும்' எனக் கூறியுள்ளார்.
கிராம பஞ்சாயத்து தலைவர் தாமோதர் சவுத்ரி இரு குடும்பத்தினரையும் சமாதானப்படுத்த முயற்சி செய்தும், பலன் கிடைக்கவில்லை. இதனால் , நேகாவின் விருப்பப்படி அவர் கணவரிடமிருந்து பிரிந்து செல்ல அனுமதி வழங்கியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த சுல்தான்கஞ்ச் போலீஸ் நிலைய அதிகாரி லால் பஹதுர் கூறும்போது, 'கிராம பஞ்சாயத்தின் இந்த நடவடிக்கை மிகுந்த பாராட்டுக்குரியது. இதுபோன்ற செயல் போலீஸ் மற்றும் நீதித் துறையின் சுமையைக் குறைக்கும் வகையில் உள்ளது' எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்