"3 வருசமா Students யாரும் வரல.. சம்பளம் மட்டும் எதுக்கு??.." ரூ.23.82 லட்சத்தை திருப்பி கொடுத்த பேராசிரியர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபீகார் பகுதியை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் ஒருவர், இரண்டு வருடம் மற்றும் 9 மாதங்கள் கல்லூரியில் இருந்து பெற்ற சம்பளத்தை திருப்பிக் கொடுத்த சம்பவம், இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
Also Read | வீடியோ வெளியிட்டு.. 'தல'ய வாழ்த்திய 'சின்ன தல'.. நெகிழ்ந்து போன ரசிகர்கள்.. வைரலாகும் ட்வீட்!!
பீகார் மாநிலம், முசாபர்பூர் பகுதியில் நிதிஷேஸ்வர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இங்கே ஹிந்தி உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் லல்லன் குமார்.
இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணிக்கு சேர்ந்தார். 2022 ஜூலை மாதத்துடன் லல்லன் குமார் வேலைக்கு சேர்ந்து 33 மாதங்கள் ஆகி விட்டது.
சம்பளத்தை திருப்பி கொடுத்த பேராசிரியர்
பணியில் சேர்ந்ததில் இருந்து, இதுவரை லல்லன் குமார் பெற்ற மொத்த சம்பளமான 23 லட்சத்து 82 ஆயிரத்து 228 ரூபாயின் காசோலையை பல்கலைக்கழகத்தின் பதிவாளருக்கே அனுப்பி வைத்துள்ளார். இதற்கு காரணம், கடந்த 33 மாதங்களில் எந்த மாணவரும் பாடம் கற்க வகுப்புக்கு வரவில்லை என்பதால், யாருக்கும் எதுவும் கற்றுக் கொடுக்காமல் அந்த சம்பளத்தை வைத்துக் கொள்ள மனசாட்சி ஒப்புக் கொள்ளவில்லை எனக்கூறி, பணத்தை திருப்பி கொடுத்துள்ளார் லல்லன் குமார்.
மனசு கேக்கல..
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இந்தியில் முதுகலை பட்டம் பெற்ற லல்லன் குமார், டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்ஃபில் மற்றும் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அதன் பின்னர் தான், நிதிஷேஸ்வர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அவருக்கு வேலை கிடைத்துள்ளது. சம்பளத்தை திருப்பிக் கொடுத்தது பற்றி பேசிய லல்லன் குமார், "நான் எனது மனசாட்சியின் குரலை கேட்டேன். அதனால், வகுப்பே நடக்காததால், பெற்ற சம்பளத்தை திருப்பிக் கொடுக்கிறேன். ஆன்லைன் வகுப்பில் கூட சொற்பமான மாணவர்களே வந்தனர். தொடர்ந்து, ஐந்து ஆண்டுகள் நான் மாணவர்களுக்கு பாடம் எடுக்காமல் இருந்தால், எனது கல்விப்பணி ரீதியாக நான் உயிரிழந்ததற்கு சமம்" என தெரிவித்துள்ளார்.
முதுகலை துறைக்கு மாத்துங்க..
லல்லன் குமார் பணிபுரிந்த பெரும்பாலான காலகட்டம் கொரோனா தொற்றின் காரணமாக ஆன்லைன் வகுப்புகள் தான் நடந்து வந்தது. அதே போல, மாணவர்கள் யாரும் வராததால், முதுகலை துறைக்காவது மாற்றுவதற்காக கல்லூரிக்கு கோரிக்கை ஒன்றை லல்லன் குமார் வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதுவும் நடக்கவில்லை.
இதுகுறித்து பேசிய கல்லூரி முதல்வர், இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றினால் வகுப்புகள் நிகழவில்லை என்றும், தற்போது தான் நிலைமை சீராகி வருவதாகவும் தெரிவித்துள்ளார். அதே போல, முதுகலை துறைக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்றால் என்னிடம் நேரடியாக கூறி இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து, பல்கலைக்கழகத்தின் தரப்பில், விரைவில் இது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்