"பைக்ல 2 ஆண்கள் போகக்கூடாது".. உத்தரவு வெளிவந்த கொஞ்ச நேரத்துலே வாபஸ் பெற்ற கர்நாடக காவல்துறை.. திடுக்கிட வைக்கும் பின்னணி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலத்தில் குறிப்பிட்ட பகுதியில் பைக்கில் இரண்டு ஆண்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில், அந்த உத்தரவை வாபஸ் வாங்கியிருக்கிறது காவல்துறை.
பதற்றம்
கர்நாடக மாநிலத்தின் கடற்கரையோர மாவட்டங்களில் ஒன்று தட்சிணா கன்னடா. கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் இந்த மாவட்டத்தை தான் உற்றுநோக்கி வருகிறது. இங்கே கடந்த 8 நாட்களில் 3 கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. இதனையடுத்து அங்கே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அந்த மாவட்டத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது. இதனையடுத்து சகஜ நிலை திரும்ப பல முயற்சிகளை காவல்துறையினர் எடுத்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக ஏடிஜிபி அலோக் குமார் நேற்று தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூர் சென்றார். மங்களூர் போலீஸ் கமிஷனர் சசிகுமாருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
தடை
இந்த ஆலோசனைக்கு பிறகு ஏடிஜிபி அலோக் குமார் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது, "நாளை முதல் மங்களூர் உள்பட மாவட்டம் முழுவதும் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரையில் பைக்கில் இரு ஆண்கள் செல்ல அனுமதி இல்லை. இந்த விதிமுறை என்பது தட்சிண கன்னடா மாவட்டத்துக்கு மட்டும் பொருந்தும். இருப்பினும் மாவட்டத்தில் 18 வயதுக்குள்ளானவர்கள், முதியவர்கள் மற்றும் பெண்களோடு டூவீலரில் பயணிக்கலாம். இதற்கு எந்த தடையும் இல்லை" என்றார்.
மேலும், இந்த தடை ஒரு வார காலத்திற்கு அமலில் இருக்கும் எனவும் குற்றச் செயல்களை தடுக்கவே இந்த தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். இதற்கு முன்னரே இந்தியாவின் பல இடங்களில் இதுபோன்ற தடை உத்தரவு விதிக்கப்பட்டிருந்ததாகவும் ஏடிஜிபி அலோக் குமார் தெரிவித்திருந்தார்.
வாபஸ்
இந்நிலையில், மங்களூரு காவல்துறையினரின் இந்த அறிவிப்பு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த உத்தரவை வாபஸ் வாங்குவதாக காவல்துறை அறிவித்திருக்கிறது. இருப்பினும் மாவட்டத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் ஆகஸ்டு 8 ஆம் தேதிவரையில் அமலில் இருக்கும் என மங்களூர் போலீஸ் கமிஷனர் சசிகுமார் தெரிவித்திருக்கிறார்.
மற்ற செய்திகள்