'ஒரே ஒரு வீடியோவால் மாறிய வாழ்க்கை'... 'இவரை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா'?... புதிய உயரத்தை தொட்ட பாபா கா தாபா !
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா பலரது வாழ்க்கையை அடியோடு மாற்றியுள்ளது. அதில் பலர் சிக்கலைச் சந்தித்தாலும் சிலருக்கு நல்ல விஷயங்களும் நடந்துள்ளது. அந்த வகையில் தான், கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாகத் தனது உணவகத்திற்கு யாரும் வரவில்லை எனவும் வருமானம் இல்லை எனவும் கண்ணீர் மல்க, காந்தா பிரசாத் என்பவர் பேசிய வீடியோ சமூகவலைத்தளத்தில் நாடு முழுவதும் வைரலானது.
80 வயதான காந்தா பிரசாத் தலைநகர் டெல்லியின் மால்வியா நகரில் பாபா கா தாபா என்ற பெயரில் சிறு உணவகம் நடத்தி வந்தார். பாபா கா தாபா கடை உரிமையாளர் காந்தா பிரசாத் தனது தொழில் முற்றிலும் முடங்கிவிட்டது என அழுதுகொண்டே பேசிய அந்த வீடியோவை யூடியூப் சேனல் நடத்தி வந்த கவுரவ் வாசன் என்பவர் எடுத்து தனது யூடியூப் சேனலில் பதிவிட்டிருந்தார்.
அந்த வீடியோ வரலானதையடுத்து ஆயிரக்கணக்கானோர் பாபா கா தாபா உரிமையாளர் காந்தா பிரசாத்திற்கு உதவ முன்வந்தனர். ஆயிரக்கணக்கானோர் அவருக்கு நிதியுதவியும் வழங்கினர். அதோடு நிற்காமல் மால்வியா நகரில் வசித்துவந்தவர்களில் பலரும் பாபா கா தாபா கடைக்குச் சென்று உணவருந்திக் கடை வியாபாரத்தை அதிகரிக்கச்செய்தனர். பலர் வழங்கிய உதவியால் காந்தா பிரசாத்தின் வருமானம் உயர்ந்து நிதி நிலை அதிகரித்தது.
இதனிடையே தனது பெயரைப் பயன்படுத்தித் திரட்டப்பட்ட நிதியை யூடியூப் சேனல் உரிமையாளர் கவுரவ் வாசன் முறைகேடாகப் பயன்படுத்தியதாக உதவி செய்த யூடியூப் சேனல் மீதே காந்தா பிரசாத் போலீசில் புகாரும் அளித்தார். அந்த விவகாரமும் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இதற்கிடையே விற்பனை அதிகரித்தல், பொதுமக்களில் பலர் வழங்கிய நிதி ஆகியவற்றால் வருமானம் உயர்ந்ததையடுத்து பாபா கா தாபா என்ற பெயரில் சிறு உணவகம் வைத்திருந்த காந்தா பிரசாத் தற்போது புதிய உயர்தர உணவகம் ஒன்றை அதே மால்வியா நகரில் தற்போது திறந்துள்ளார்.
மேலும் தனது பழைய உணவகத்தை மூடிவிட்ட காந்தா பிரசாத், இந்திய மற்றும் சீன உணவுகளை நாங்கள் இங்கு வழங்குகிறோம். தற்போது மேலும் மகிழ்ச்சியோடு இருக்கிறோம் எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்