'மருத்துவக் கல்லூரி மாணவி கொலை?'... 'கழுத்தில் காயம் இருப்பதாக தகவல்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சாதியை வைத்து கிண்டல் செய்ததால், தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்ட  பெண் மருத்துவர், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'மருத்துவக் கல்லூரி மாணவி கொலை?'... 'கழுத்தில் காயம் இருப்பதாக தகவல்'!

மும்பை பி.எல்.ஒய். நாயர் மருத்துவக் கல்லூரியில்,  2-ம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு படித்து வந்தவர் பாயல் தத்வி. இவரது கணவர் பெயர் சல்மான்.  26 வயதான பாயல், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் மருத்துவ கல்லூரி விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அக்ரிபாடா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இதில், பழங்குடியினத்தை சேர்ந்த மருத்துவர் பாயலை, அவருடன் மருத்துவ மேல்படிப்பு படித்து வரும் ஹேமா, பக்தி, அங்கிதா ஆகியோர் சாதி ரீதியாக துன்புறுத்தி வந்ததும், இதனால் மனமுடைந்து மாணவி தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 மருத்துவர்கள் மீதும், மாணவியை தற்கொலைக்கு தூண்டியது மற்றும் வன்கொடுமை தடுப்புசட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து, மருத்துவர்கள் 3 பேரும் தலைமறைவானார்கள். இந்நிலையில், மருத்துவர் பாயல் இறப்புக்கு காரணமான மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரது தாய் மற்றும் குடும்பத்தினர் நாயர் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரியிருந்த 3 மருத்துவர்களும், கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

பின்னர் 3 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது பாயல் தத்வியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவர் கழுத்தை நெரித்தற்கான அடையாளமான காயம் இருந்தது தெரிய வந்துள்ளதாக, அவரது வழக்கறிஞர் தரப்பில் வாதிடப்பட்டது. இதனால் மருத்துவர்கள் பாயலை கொலை செய்திருக்கக் கூடும் என்று சந்தேகப்படுவதாகவும், தத்வி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கைதுசெய்யப்பட்ட மருத்துவர்கள் 3 பேரையும் வெள்ளிக்கிழமை வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

PAYALTADVI, MEDICALSTUDENT, MUMBAI