நீ என்ன பெரிய 'கலெக்டரா'ன்னு நக்கலா கேட்டாங்க...! 'விட்டுட்டு போன கணவன்...' - வாழ்க்கையில போராடி சாதித்த பெண்மணி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாதனது விடாமுயற்சியின் மூலம் தூய்மைப் பணியாளராக பணியாற்றிய ஆஷா ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
ஜோத்பூரைச் சேர்ந்த 40 வயதான ஆஷா கணவனால் கைவிடப்பட்ட பெண்மணி. அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் வறுமையின் காரணமாக ஜோத்பூர் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக தனது தாயுடன் இணைந்து பணியாற்ற தொடங்கியிருக்கிறார்.
சிறுவயதில் பள்ளிக்கூட படிப்பில் சிறந்து விளங்கிய ஆஷா, 40 வயதானாலும் தன் கல்வி கனவை தொடர பெற்றோர் உதவியுடன் கல்லூரியில் சேர்ந்து 2018-ல் பட்டமும் பெற்றுள்ளார். அதுமட்டுமில்லாமல், அரசுப் பணி தேர்வுக்காகவும் தயாராகி வந்துள்ளார்.
மேலும், 2018-ல் அரசுப் பணிக்கான தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெற்ற போது இரண்டிலும் ஆஷா கலந்துக்கொண்டுள்ளார். அதன்பின் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேர்வின் முடிவுகள் தாமதமாக அறிவிக்கப்பட்டாலும், இதில் நல்ல மதிப்பெண் எடுத்து தற்போது வெற்றிபெற்றுள்ளார்.
கடந்த சில வருடங்களுக்கு முன் தூய்மைப் பணியாளராக இருந்த ஆஷா, தற்போது துணை கலெக்டராக உருவெடுத்துள்ளார். இந்த சம்பவம், ஆஷா அவரது குடும்பம் மட்டுமல்லாது அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து என்டிடிவி-க்கு பேட்டியளித்த ஆஷா, 'நான் முன்பெல்லாம் சில இடங்களில் ஏதேனும் கேள்வி கேட்டால் நீங்கள் என்ன கலெக்டரா என மக்கள் என்னை கேலி செய்வார்கள்.
அப்போதெல்லாம் கலெக்டர் என்றால் என்ன என்று எனக்குத் தெரியாது. அதன்பின் கலெக்டருக்கான அர்த்தத்தை கண்டுபிடித்தேன். அப்போதே ஐஏஎஸ் தேர்வில் கலந்துகொள்ள ஆசைப்பட்டேன்.
எனக்கு சிவில் சர்வீஸ் தேர்வுக்கான வயது வரம்பு முடிந்துவிட்டது என்பதை அறிந்து ராஜஸ்தான் அரசுப் பணி தேர்வாணைய தேர்வுகளில் கலந்துகொள்ள முடிவு செய்தேன்.
தேர்வுக்காக 3 ஆண்டுகளாக தயாராகி வந்தேன். இடையில் தூய்மைப் பணியாளராகவும் பணிக்குச் சென்றேன்.
அந்த பணியில் எனக்கு ரூ.12,500 சம்பளம் கிடைத்தது. என்னை பொறுத்தவரை எந்த வேலையும் சிறியது பெரியது என கிடையாது.
ஒருவர் உங்கள் மீது கற்களை எறிந்தால், அதை சேகரித்து நாம் ஒரு பாலம் கட்ட வேண்டும் என்பது என் எண்ணம். இப்போது நான் தேர்ந்தெடுள்ள பணியின் மூலம் என்னைப்போன்றோருக்கு உதவவும் விரும்புகிறேன்' எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்