கல்யாண கோஷ்டி சார்.. பொண்ணு மாப்பிள்ளை எங்க? அரசு பஸ்சில் வேற லெவல் சம்பவம்.. திகைத்துப்போன போலீஸ்
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திரா: தமிழக அரசு பேருந்தில் திருப்பதியில் இருந்து திருப்பத்தூர் சென்ற கல்யாண கும்பலிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.
பெரும்பாலும் ஆந்திர எல்லை பகுதிகளில் நாளுக்கு நாள் செம்மரக்கடத்தல் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுகிறது. தீவிர போலீஸ் பாதுகாப்பை மீறி, பலர் இந்த குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் சிறு துண்டு செம்மரக்கட்டை கூட பல லட்சம் என பேரம் பேச படுகிறது. செம்மரத்தை வெட்டி கடத்துவது என்பது ஆந்திர போலீசாருக்கு நாளுக்கு நாள் பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.
திருப்பத்தூர் - சித்தூர் சாலையில் சோதனை
தேக்கு, சந்தன மரம் போன்றவற்றை பற்றி பலருக்கு தெரியும் ஆனால் இந்த செம்மரத்தை பற்றி தெரிந்தவர்கள் மிக சிலர் தான். செம்மரத்திலேயே பலவகைகள் இருக்கின்றன. இந்நிலையில், ஒரு கும்பல் அரசுப்பேருந்தை வாடகைக்கு எடுத்து செம்மரம் கடத்திய சம்பவம் போலீசாரையே திகைக்க வைத்துள்ளது. திருப்பதியில் இருந்து பயணிகளுடன் தமிழ்நாடு அரசுப்பேருந்து ஒன்று திருப்பத்தூர் நோக்கி வந்தது. திருப்பத்தூர் - சித்தூர் நெடுஞ்சாலையில் போலீசார் பேருந்தை மறைத்து சோதனையிட்டனர்.
திருமண கும்பல்
அப்போது, பேருந்துக்குள் திருமணத்திற்கு சென்று வருவதாக தெரிவித்து பெரிய கூட்டமே இருந்தது. பேருந்துக்குள் சென்று சோதனையிட்ட போலீசார் பேருந்துக்குள் பொண்ணு, மாப்பிள்ளையை காணவில்லை. இதனால், போலீசார் துருவி துருவி கேள்வி கேட்டனர். மணமக்கள் வேறு வாகனத்தில் வருவதாக உளறிக்கொட்டியுள்ளது அந்த கும்பல். சந்தேகத்துடன் பார்த்த போலீசார் குறுக்கு விசாரணை செய்துள்ளனர். மேலும், குறுக்கு விசாரணை செய்ததில் திடீரென பேருந்துக்குள் இருந்த 36 பேரும் ஆளுக்கு ஒரு பக்கமாக திசையை தேடி ஓடினர்.
அரசு பேருந்தில் செம்மரம் கடத்தல்
இதனையடுத்து, பேருந்து ஓட்டுநரை பிடித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்தன. அரசுப் பேருந்தை வாடகைக்கு எடுத்த செம்மரக் கடத்தல் கும்பல் ஆட்களை பேருந்தில் அழைத்துச் சென்றுள்ளனர். செம்மரத்தை வெட்டி கொடுத்துவிட்டு மொத்த ஆட்களும் ஊருக்கு திரும்பியுள்ளனர். அப்போது தான் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கும்பலை யார் பணிக்கு அனுப்பியது, செம்மரம் எங்கே வெட்டப்பட்டது போன்ற யூகத்தில் போலீசார் தேடி வருகின்றனர்.
முன்னதாக சித்தூர் மாவட்டம் சந்திரகிரி அடுத்த மூலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் செம்மரக்கட்டைகளை கடத்தை முயன்று போலீசிடம் சிக்கியது குறிப்பிடத்தக்கது. செம்மரக்கட்டைகளை கடத்த சரக்கு வேனில் தக்காளி டிரேக்களை வைத்து கடத்தி, போலீசிடம் சிக்கினார்.
மற்ற செய்திகள்