இரண்டே நாளில் 500-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு.. வாந்தி, மயக்கம் என அதிரவைத்த ‘மர்ம நோய்’.. இதுதான் காரணமா..?
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திராவில் மர்ம நோய் காரணமாக 500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியை அடுத்த ஏலூர் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட மக்களுக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. அதில் பலருக்கும் வாந்தி, மயக்கம், வலிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் மர்ம நோய் பரவியுள்ளதாக தகவல் வேகமாக பரவியது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்களின் ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில் எந்த வித வைரஸ் தொற்றும் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் சுகாதாரத்துறையினர் முகாம்கள் அமைத்து வீடு வீடாக பரிசோதனை மேற்கொண்டனர். இரண்டே நாட்களில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் இந்த நோய் குறித்து ஆராய டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்குழு ஆந்திரா வந்தது. இந்த குழு பாதிக்கப்பட்ட பகுதியில் கள ஆய்வு நடத்தியதுடன், மர்ம நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை சோதனை செய்தனர். மேலும் மாநில அரசின் உத்தரவுப்படி ஏலூர் கிராமத்தை சுற்றியுள்ள சுமார் 30 கிராமங்களில் தண்ணீர் மற்றும் மக்கள் வாங்கும் பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
தற்போது பரிசோதனைகளின் முதற்கட்ட முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் கிராம மக்கள் பயன்படுத்திய தண்ணீர் மற்றும் பாலில் ஈயம் போன்ற ரசாயனம் கலப்படம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த கலப்படம் எப்படி நடந்தது? என அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது மர்ம நோய் இல்லை என்பதால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்