ரயில் தாமதம்: நீட் தேர்வை தவறவிட்ட கர்நாடகா மாணவர்கள்.. மறுவாய்ப்பு வழங்கியது மத்திய அரசு!
முகப்பு > செய்திகள் > இந்தியாரயில் தாமதத்தின் காரணமாக நீட் தேர்வு எழுத முடியாமல் போன கர்நாடகா மாணவர்களுக்கு, மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நடைபெற்றது. ஞாயிறு மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கியது. தேர்வு எழுதும் மாணவர்கள் 1.30 மணிக்கு முன்னதாக தேர்வு அறைக்குச் சென்றிருக்கவேண்டும்.
கர்நாடகா மாநிலத்தில் ரயில் 6 மணி நேரம் தாமதமானதால் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் போனது. வடக்கு கர்நாடகாவிலிருந்து பெங்களூருக்குச் செல்லும் ஹம்பி விரைவு ரயில் காலை 7 மணிக்கு பெங்களூருவுக்குச் சென்றிருக்கவேண்டும். ஆனால், அந்த ரயில் 2.30 மணி அளவில்தான் பெங்களூருவை சென்றடைந்தது.
சுமார், 6 மணி நேரம் அந்த ரயில் தாமதமாக சென்றடைந்துள்ளது. அந்த ரயிலில் சென்ற மாணவர்கள் பலர் ட்விட்டர் மூலம் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு புகார் அளித்தனர். 'ரயில் தாமதத்தால் நீட் தேர்வு எழுத முடியாத சூழல் உருவாகியுள்ளது. உதவ வேண்டும்' என்று கோரிக்கை வைத்தனர்.
அந்த ரயில் தாமதத்தின் காரணமாக 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டது. தேர்வு எழுத முடியாத சூழலுக்கு உள்ளான மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் தற்போதைய முதல்வர் குமாரசாமியும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்தநிலையில், இந்த விவகாரம் குறித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ட்விட்டர் பதிவில், ‘ரயில் தாமதத்தின் காரணமாக நீட் தேர்வு எழுத முடியாமல் போன்ற மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.
மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத அனுமதி அளித்ததற்கு கர்நாடக மாநில முதல்வர் அலுவலக ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thank you @PrakashJavdekar and @HRDMinistry for considering the request and helping our students.@hd_kumaraswamy #NEET https://t.co/XuFDAzHCkp
— CM of Karnataka (@CMofKarnataka) May 6, 2019