'கிழிந்த உடையிலிருந்த ரத்தக்கறை'... 'அரண்டு கிடக்கும் மொத்த பாலிவுட்'... 'இவர் நிஜ வாழ்க்கையே ஆக்சன் த்ரில்லர் தான்'... யார் இந்த சமீர் வான்கடே?
முகப்பு > செய்திகள் > இந்தியாசமீர் வான்கடே இந்த ஒற்றை பெயரைக் கேட்டுத் தான் மொத்த பாலிவுட்டும் அதிர்ந்து நிற்கிறது. போதை மாஃபியாக்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் இந்த சமீர் யார். விரிவாகத் தெரிந்து கொள்வோம்.
நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது தான் பாலிவுட்டின் ஒரே பேசுபொருளாக உள்ளது. இப்படி ஒரு கைது சம்பவம் நடக்கும் என யாரும் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது என மனதில் பயத்துடனும், கண்ணில் தவிப்புடனும், பாலிவுட் நிற்பதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் தான் சமீர் வான்கடே.
இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்குப் பின்னர் பாலிவுட்டின் கருப்பு பக்கங்கள் குறித்து அவ்வப்போது செய்திகள் வெளிவருவது வழக்கம். அப்போதெல்லாம் சமீர் வான்கடே என்ற பெயரும் அடிபடும். Narcotics Control Bureau (NCB) என அழைக்கப்படும் மத்திய போதை தடுப்பு பிரிவின் மும்பை மண்டல இயக்குநராக பணியாற்றி வருபவர் தான் சமீர் வான்கடே.
சுஷாந்த் மரணத்திற்குப் பின்னர் பாலிவுட்டில் நிலவும் போதை கலாச்சாரம் மெல்ல மெல்ல வெளி உலகத்திற்குத் தெரிய ஆரம்பித்தது. அந்த வகையில் போதை மாஃபியாக்களை துடைத்தெறியும் பணியில் சமீர் வான்கடே நேரடியாகவே களமிறங்கியுள்ளார்.
அவரது தலைமையிலான அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையின் காரணமாகப் பாலிவுட் நடிகர்கள் மற்றும் அதிகாரம் மற்றும் பணம் படைத்த பலரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தார். 2008 பேட்ச் ஐஆர்எஸ்(IRS) அதிகாரியான சமீர் வான்கடே, மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரியாகத் தனது பணியைத் தொடங்கினார்.
2008 முதல் 2020 வரை, அவர் விமானப் புலனாய்வுப் பிரிவின் துணை ஆணையர் (AIU), தேசிய புலனாய்வு அமைப்பின் (NIA) கூடுதல் காவல் கண்காணிப்பாளர், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) இணை ஆணையர் எனப் பல முக்கியமான பொறுப்புகளை வகித்த சமீர், தற்போது போதைப் பொருள் தடுப்பு பிரிவின் மும்பை மண்டல இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
மிகவும் கண்டிப்பான அதிகாரியாக அறியப்படும் சமீர், இதுவரை 2,000-க்கும் மேற்பட்ட விஐபிகள் மீது வரி செலுத்தாததற்காக வழக்குப் பதிவு செய்துள்ளார். மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரியாக பணியாற்றியபோது வெளிநாடுகளிலிருந்து சுங்கவரி செலுத்தாமல் பொருட்களைக் கொண்டுவந்ததோடு வெளிநாட்டு கரன்சியை கொண்டு வந்த விஐபிகள் மீது அதிரடியாக நடவடிக்கை எடுத்தார்.
உதாரணமாகக் கடந்த 2013-ம் ஆண்டு பிரபல பாப் பாடகர் மிகா சிங்கை மும்பை விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகளுடன் பிடித்து அதிரடி காட்டினார். சமீரின் அதிரடிக்கு ஐசிசி உலகக்கோப்பையும் தப்பவில்லை. கடந்த 2011ம் ஆண்டு ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்திய சமீர், தங்கத்தால் ஆன உலகக் கோப்பைக்கு மும்பை விமான நிலையத்தில் சுங்கக் கட்டணம் செலுத்தப்படாமல் எடுத்துச் செல்ல முடியாது என அதிரடியாகத் தெரிவித்ததோடு, கட்டணம் செலுத்திய பின்னர் தான் உலகக்கோப்பையை எடுத்துச் செல்ல அனுமதித்தார்.
போதைப் பொருள் தடுப்பு பிரிவில் இணைந்த பிறகு சமீர் தலைமையிலான குழு, ரூ.17,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளது. பாலிவுட் சினிமாவின் மிகத் தீவிரமான ரசிகரான சமீர், பாலிவுட் நடிகையைத் திருமணம் செய்து கொண்டார். அஜய் தேவ்கன் நடிப்பில் 2003-ல் வெளியான 'கங்காஜல்' படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமான கிராந்தி ரெட்கரை தான் சமீர் மணமுடித்துள்ளார்.
தனது கணவர் குறித்துப் பேசிய கிராந்தி, ''போதை தடுப்புப் பிரிவு அதிகாரியாக பணியாற்றுவது என்பது அவ்வளவு எளிதல்ல. பல மிரட்டல்கள் வரும். இதனால் பல நேரங்களில் குடும்பத்தோடு வெளியில் செல்வதைத் தவிர்ப்போம். சில நேரங்களில் பேண்ட்டில் ரத்தக்கறையுடன் வீட்டிற்கு வந்திருக்கிறார்.
ஆடை கிழிந்து வந்திருக்கிறார். அப்போதே நான் புரிந்து கொள்வேன். அவர் ஏதோ பெரிய போதைப் பொருள் மாஃபியாவை எதிர்த்துப் போராடிவிட்டு வந்துள்ளார் என்று. கணவரின் பணியை தற்போது மக்கள் பாராட்டுவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது'' எனக் கிராந்தி தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்