நாடாளுமன்றத் தேர்தலின் போது கட்சிகள் அச்சப்படும் இன்னொரு எதிரி. 2013 ஆம் ஆண்டு நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, தொடர்ந்து அதற்கு ஆதரவு பெருகி வருகிறது. இந்த ஆதரவு பல அரசியல் கட்சிகளுக்கு அச்சத்தைக் கொடுத்துள்ளது.
நோட்டாவில் வாக்கு அளிப்பதன் மூலம் ஒரு தேர்தலின் தாக்கத்தைப் பெருமளவு மாற்றிவிட முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எப்படி இருந்தாலும், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மீதும் ஒரு குடிமகன் அதிருப்தி கொண்டிருக்கும் போது, நோட்டாவுக்கு ஓட்டு போட்டு தனது எதிர்ப்பைப் பதிவ செய்யலாம்.
விவசாயப் பிரச்னை, கிராமப்புற பிரச்னை, வேலைவாய்ப்பின்மை போன்ற காரணங்களால், தேசிய அளவில் பலர் அரசியல் கட்சிகள் மீது அதிருப்தியில் உள்ளனர். அவர்களில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினர் இந்த முறை நோட்டாவில் வாக்களிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஒடிசாவைச் சேர்ந்த ஒரு விவசாய சங்கம், ‘நோட்டாவுக்கு ஓட்டுப் போட வேண்டும்' என்பதை வலியுறுத்தி வருகிறது. இப்படி நோட்டாவுக்கு எதிராகவும் ஆதரவாகவும் தொடர்ந்து பரப்புரை நிகழ்த்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்தலில் நோட்டாவின் தாக்கம் நேரடியாக முடிவுகளில் பிரதிபலிக்கும் என்று தெரிகிறது.