‘உலகமே பார்த்துட்டு இருக்கு’!.. ‘அவங்க பிரச்சனையை புரிஞ்சிக்க இந்தியராக இருக்கணும்னு அவசியமில்லை’.. பிரபல நடிகை ஆவேசம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாவிவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக மற்றொரு அமெரிக்க நடிகை ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக இரண்டு மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக கடந்த குடியரசு தினத்தன்று டெல்லி நோக்கி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது வெடித்த வன்முறை இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனால் விவசாயிகள் போராடிய பகுதியில் இண்டர்நெட் சேவை நிறுத்தப்பட்டு, பின்னர் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் பிரபல அமெரிக்க பாப் பாடகி ரிஹன்னா விவசாயிகளுக்கு ஆதரவாக, ‘நாம் ஏன் இவர்களை பற்றி பேசவில்லை?’ என கேள்வி எழுப்பி, இண்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்ட செய்தியை டேக் செய்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். 101 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை கொண்டுள்ள ரிஹன்னாவின் ட்வீட் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவரைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் செயற்பட்டாளர் கிரேட்டா தன்பெர்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் செய்தார்.
இதனை அடுத்து, உள்நாட்டு விவகாரங்களில் யாரும் தலையிட வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டல்கர், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ரஹானே மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். அதேபோல் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், கங்கனா ரனாவத் உள்ளிட்ட திரைபிரபலங்களும் தங்களது கண்டனத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில் அமெரிக்க நடிகை அமெண்டா செர்னி விவசாயிகளுக்கு ஆதரவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘டெல்லி விவசாயிகள் போராட்டத்தை உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது. பிரச்சனையை புரிந்துக் கொள்ள நீங்கள் இந்தியராகவோ, பஞ்சாபியாகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மனிதநேயம் இருந்தாலே போதும். அனைவருக்கும் பேச்சு சுந்திரம் உள்ளது. அனைவரும் கருத்து தெரிவிக்கலாம்’ என அமெண்டா செர்னி ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்