கேரளாவை தொடர்ந்து ‘மற்றொரு’ மாநிலத்தில் பரவிய ஜிகா வைரஸ்.. உடனே சுகாதார குழுவை அனுப்பிய மத்திய அரசு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவை தொடர்ந்து மற்றொரு மாநிலத்திலும் ஜிகா வைரஸ் பரவியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் கொரோனா பாதிப்பு அச்சுறுத்தி வரும் நிலையில், கேரளாவில் ஜிகா வைரஸ் (Zika virus) பாதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏடிஸ் (Aedes) வகை கொசுக்களின் மூலம் இந்த ஜிகா வைரஸ் பரவுகிறது. கேரளாவில் 60-க்கும் மேற்பட்டோருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழக-கேரளா எல்லைகளில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கேரளாவைத் தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் ஜிகா வைரஸ் பரவி உள்ளது. புனே நகரில் 50 வயது பெண் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து அந்த பெண் குணமடைந்த நிலையில் அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அதில் யாருக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆனாலும் ஜிகா வைரஸ் பரவலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வைரஸ் பரவல் குறித்து பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
இந்த நிலையில் நிலைமையை கண்காணிக்கவும், ஜிகா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும் மற்றும் பணியில் அதிகாரிகளுக்கு உதவவும் மத்திய அரசு மகாராஷ்டிராவுக்கு உயர்மட்ட சுகாதார குழுவை அனுப்பி வைத்துள்ளது.
மற்ற செய்திகள்