கருப்பு, வெள்ளை பூஞ்சையை தொடர்ந்து ‘மஞ்சள் பூஞ்சை’ பரவல்.. இந்தியாவில் ஒருவருக்கு பாதிப்பு.. இதன் அறிகுறிகள் என்ன..?
முகப்பு > செய்திகள் > இந்தியாகருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சையை தொடர்ந்து மஞ்சள் பூஞ்சை ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை தாக்குவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், ஸ்டீராய்டு எடுத்துக் கொண்டவர்களை எளிதாக தாக்குவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ‘மியூகோர்மைகோசிஸ்’ (Mucormycosis) என்று அழைக்கப்படும் கருப்பு பூஞ்சையானது மூளை மற்றும் நுரையீரலை தாக்குகிறது. இந்த தொற்று ஏற்பட்டால் முகம், கண் கீழ்ப்பகுதியில் வலி, வீக்கம், மூக்கடைப்பு, கண் மங்குதல் போன்ற அறிகுறி காணப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து கருப்பு பூஞ்சையை விட மோசமான வெள்ளை பூஞ்சை பீகாரின் பாட்னாவில் கண்டறியப்பட்டது. ஒரு மருத்துவர் உட்பட நான்கு பேருக்கு வெள்ளை பூஞ்சை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நுரையீரல், தோல், வாய், சிறு நீரகம், மூளை பிறப்புறுப்புகளை பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சைகளை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் மஞ்சள் பூஞ்சை உத்தரப்பிரதேசத்தின் காஸியாபாத்தில் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சோம்பல், குறைந்த பசி அல்லது பசியின்மை, எடை இழப்பு, கண்பார்வை மங்குதல், காயங்கள் மெதுவாக குணமடைதல் போன்றவை இதன் அறிகுறிகளாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மஞ்சள் பூஞ்சை தொற்று மோசமான சுகாதாரத்தால் தான் ஏற்படுவதாக மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதனால் வீட்டின் அருகே ஈரப்பதம் இல்லாத வகையில் வைத்திருக்க வேண்டும். இந்த ஈரப்பதம் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். பழைய உணவுப் பொருட்களை உடனே அகற்ற வேண்டும். கழிவறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மஞ்சள் பூஞ்சையின் அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவர்களை அணுக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்