'எனக்கு இருமுடி கட்டி சபரிமலை போணும்'...'ரெஹானா' அதிரடி'.. பரபரப்பு பதிலளித்த கேரள காவல்துறை!
முகப்பு > செய்திகள் > இந்தியாசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல அனுமதி கேட்டும் பாதுகாப்பு கோரிய, சமூக செயற்பாட்டாளர் ரெஹானா பாத்திமாவுக்கு கேரள காவல்துறை அதிரடியாக பதிலளித்துள்ளது.
சபரிமலை விவாகரத்தில் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், அனைத்து வயது பெண்களும் கோவிலுக்கு செல்லலாம் என கூறியிருந்தது. இதையடுத்து சமூக செயற்பாட்டாளர் ரெஹானா பாத்திமா மற்றும் பெண் பத்திரிகையாளர் ஒருவரும் சபரிமலைக்கு செல்ல முயன்றபோது , அங்கிருந்த ஐயப்ப பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். இதையடுத்து அதையும் மீறி ரெஹானா பாத்திமாவும், பெண் பத்திரிக்கையாளரும் சபரிமலைக்கு செல்ல முயன்றனர்.
இதனைத்தொடர்ந்து ரெஹானா பாத்திமாவுக்கு போலீஸ் உடை அணிவித்து. ஐஜி தலைமையிலான காவல்துறையினர், பலத்த பாதுகாப்போடு பம்பாவில் இருந்து சபரிமலைக்கு அழைத்து சென்றார்கள். இதையடுத்து சபரிமலை சந்நிதானத்தின், கீழ்பகுதியில் உள்ள நடைப்பகுதியில் திரண்ட பக்தர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தி கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது என கோஷங்கள் எழுப்பினார்கள். காவல்துறையினர் பக்தர்களோடு பேச்சுவார்த்தை நடத்தியபோதும், பக்தர்கள் சரண கோஷம் எழுப்பியவாறு பெண்களை அனுமதிக்க முடியாது என போராட்டம் நடத்தினர்.
இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதையடுத்து, இந்த விவகாரத்தில் தலையிட்ட கேரள அரசு, இந்த இரு பெண்களையும் திருப்பி அனுப்ப போலீஸாருக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து ரெஹானா பாத்திமாவும், உடன் வந்த பெண் பத்திரிக்கையாளரையும் திருப்பி அனுப்பினர். இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டும் சபரிமலை ஐயப்பன் கோயில் செல்வதற்கு தனக்கு பாதுகாப்பு அளிக்கும்படி கேரள காவல்துறைக்கு ரெஹானா மனு அனுப்பினார்.
அதற்கு பதிலளித்துள்ள கேரள காவல்துறை, ரெஹானா பாத்திமாவுக்கு எவ்வித பாதுகாப்பும் அளிக்க முடியாது என கூறியுள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்து பேசிய கேரள மாநிலக் காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவர், "பெண்ணியவாதிகளுக்கும் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் சபரிமலையில் இடமில்லை. சபரிமலை ஐயப்பன் கோவில் புரட்சி செய்வதற்கான இடமில்லை என மாநில அரசு ஏற்கெனவே தெரிவித்துள்ளது" என கூறினார்.