‘என் வாழ்க்கையோட சிறந்த நாள்’!.. ஆசிட் வீச்சில் முகம் சிதைந்த பெண்ணை கரம்பிடித்த இளைஞர்.. குவியும் வாழ்த்து..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆசிட் வீச்சில் முகம் சிதைந்த பெண்ணை கரம்பிடித்த இளைஞருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்துள்ள கனக்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரமோதினி ரௌல் (29). கடந்த 2009-ம் ஆண்டு காதல் விவகாரம் காரணமாக முன்னாள் ராணுவ வீரர் சந்தோஷ்குமார் பெடந்தா என்பவர் பிரமோதினியின் முகத்தில் ஆசிட் வீசினார். இதில் படுகாயமடைந்த பிரமோதினி எஸ்.சி.பி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 5 வருடங்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
முகம் சிதைந்து வாழ்க்கை முடிந்துவிட்டது என பிரமோதினி சோகத்தில் தினமும் கண்ணீர் வடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு பிரமோதினி சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைக்கு மருந்து பிரதிநிதியாக சரோஜ் குமார் (30) என்பவர் வந்துள்ளார். அப்போது பிரமோதினியை சந்தித்த அவர், தினமும் பிரமோதினிக்கு ஆறுதலும், ஊக்கமும் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் பிரமோதினியை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த சரோஜ் குமார், தனது விருப்பத்தை பிரமோதினியிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டதும் மகிழ்ச்சியில் கண்கலங்கிய பிரமோதினி, இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இருவரும் கடந்த 2018-ம் ஆண்டு காதலர் தினத்தன்று நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
தற்போது இரு வீட்டாரும் திருமணத்துக்கு சம்மதித்துள்ள நிலையில் கடந்த திங்கள்கிழமை இருவருக்கும் கனக்பூர் கிராமத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பிரமோதினி போல் ஆசிட் வீச்சால் பாதிக்கபட்ட பலர் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினர்.
இதுகுறித்து தெரிவித்த பிரமோதினி, ‘இந்த சமூகம் திருமணத்துக்கு பெண்ணின் முகத்துக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. எனக்கு இது கனவாகவே இருந்தது. ஆனால் எனது குடும்பத்தினரும், சரோஜின் குடும்பத்தினரும் ஆதரவு கொடுத்ததால் இது நடந்துள்ளது. இது என் வாழ்க்கையின் மிகச்சிறந்த நாள்’ என மகிழ்ச்சி ததும்ப தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த ஜோடிக்கு சமூக வலைதளங்களில் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்