'இந்த பொண்ண ஞாபகம் இருக்கா'... 'போலீஸ் உடையில் பார்த்ததும் வாயடைத்து போன உறவினர்கள்'... வாழ்க்கையை புரட்டி போட்ட அதிரடி சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇவரெல்லாம் வாழ்க்கையில் எங்கே ஜெயிக்க போகிறார்கள் என நினைக்கும் சிலரின் எண்ணத்தை உடைத்துள்ளது கேரளாவில் நடந்துள்ள சம்பவம்.
நமக்கான நேரம் ஒரு நாள் வரும், அதுவரை நாம் உழைத்துக் கொண்டு இருக்கிறோமா என்பது தான் கேள்வி என்ற கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், பல சோதனைகளைச் சாதனைகளாக மாற்றியுள்ளார் கேரள பெண் ஒருவர். கேரள மாநிலம் காஞ்ஞிரம்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனி சிவா.
இவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது, இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் இருவரும் நண்பர்களாகப் பழகிய நிலையில் நாட்கள் செல்ல செல்ல அது காதலாக மாறியது. ஆனால் நீ படித்துக் கொண்டு இருக்கிறாய், இந்த நேரத்தில் காதல் எல்லாம் வேண்டாம் என ஆனியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பெற்றோரின் எதிர்ப்பை மீறி தனது காதலனைக் கைப்பிடித்தார் ஆனி. ஆரம்பத்தில் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகச் சென்ற நிலையில், அதன் பயனாக குழந்தையும் பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்த 6 மாதத்தில் கணவன், மனைவி இடையே பிரச்சனை வெடித்த நிலையில், கை குழந்தையோடு கணவனைப் பிரித்துப் பெற்றோரைத் தேடி வந்தார் ஆனி.
ஆனால் உன்னை ஏற்றுக் கொள்ள முடியாது எனப் பெற்றோர் கூறி விட்ட நிலையில், கை குழந்தையோடு என்ன செய்வது எனத் தெரியாமல், தனது பாட்டியின் குடியிருப்புக்கு அருகே ஒரு சிறிய குடிசை ஒன்றை அமைத்து அதில் தனது வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார். கை குழந்தையை வைத்துக் கொண்டு உதவிக்கு யாரும் இல்லாமல் என்ன வேலைக்குச் செல்வது என்றும் தெரியாமல், வீட்டிலிருந்து கொண்டு மசாலா தூள் மற்றும் சோப்பு உள்ளிட்டவற்றைத் தயாரித்து வீடு வீடாகத் தனது குழந்தையோடு சென்று விற்க ஆரம்பித்துள்ளார்.
மறுபக்கம் சமூகவியலில் பட்டப்படிப்பையும் படித்து முடித்தார். அதோடு மகன் சிவ சூரியாவுக்காக ஆண்கள் போல முடி திருத்திக் கொண்டார். இந்தச்சூழ்நிலையில் தான் ஆனியின் நண்பர் ஒருவர், நீ ஏன் பெண்கள் எஸ்ஐ தேர்வில் கலந்து கொள்ளக் கூடாது எனக் கேட்டுள்ளார்.
ஆனால் ஆனி அதற்கு விருப்பம் இல்லை எனக் கூற, ஒரு முறை முயற்சி செய்து பார், பின்னர் பிடிக்கவில்லை என்றால் வேறு வேலை பார்க்கலாம் எனக் கூறி ஆனியைக் கடந்த 2014ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் சேர்த்துள்ளார். வெற்றி பெற்று விட வேண்டும் என்ற உறுதியோடு கடினமாகப் படித்த ஆனி, கடந்த 2016ம் ஆண்டு காவல்துறை தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்தார். ஆனால் அதோடு நின்று விடாமல் 2019ல் மீண்டும் எஸ்.ஐ பதவிக்கான தேர்வெழுதி அதில் வெற்றியும் பெற்றார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆனி சிவா வர்க்கலா பகுதியில் காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்றார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, எந்த இடத்தில் தனது தினசரி வாழ்க்கையை ஓட்டுவதற்காகக் கோவில்களில் ஐஸ்கிரீம் மற்றும் எலுமிச்சைப் பழ ஜூஸ் விற்றாரோ அதே பகுதியில் காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ளார் ஆனி.
இவள் எல்லாம் எங்கே வாழ்க்கையில் முன்னேறப் போகிறாள், இவள் கதை முடிந்து விட்டது என ஆனி கை குழந்தையோடு கஷ்டத்தில் இருந்தபோது அவருக்கு உதவி செய்யாமல் ஆனியைக் கிண்டல் செய்த அவரது உறவினர்கள் பலரும் காவல்துறை உடையில் கம்பீரமாக வந்த ஆனியைப் பார்த்து வாயடைத்துப் போனார்கள். எந்த சூழ்நிலையிலும் கடின உழைப்பு இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணமாக நிற்கிறார் ஆனி சிவா.
மற்ற செய்திகள்