'ஹனிமூன் கூட கேன்சல்'... 'உங்கள பாத்தா பொறாமையா இருக்கு'... பலரையும் நெகிழ வைத்த இளம் தம்பதி!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மும்பை, டெல்லி, சென்னை போன்ற முக்கிய நகரங்களில் நோய் பரவல் அதிவேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது. இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால், இந்த நோய்க்கு எதிராக நின்று களத்தில் போராடி வரும் மருத்துவர்கள், செவிலியர்களே அதிகம் பாதிக்கப்படுவது தான். ஆனால் இதைப் பற்றி எல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல், டெல்லியைச் சேர்ந்த இளம் தம்பதி களத்தில் நின்று போராடி வருகிறது.
டெல்லியைச் சேர்ந்தவர் டாக்டர் ரஷ்மி மிஸ்ரா. இவருக்கு 28 வயது ஆகிறது. அதேபோல் டாக்டர் இஷான் ரோஹத்கி. இவருக்கு 29 வயதுதான் ஆகிறது. இருவருக்கும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடைபெற்ற நிலையில், இருவரும் தனியாக நேரம் செலவழிக்க, மற்றும் வெளிநாட்டிற்குச் செல்ல திட்டம் போட்டிருந்தார்கள். ஆனால் கொரோனா வந்த நிலையில், அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு ரஷ்மியும் இஷானும் மருத்துவ சேவையில் நேரம் காலம் பார்க்காமல் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் இருவரும் டெல்லி லோக் நாயக் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இவர்கள் தங்களது குடும்பத்தினரைச் சந்தித்துள்ளனர். அதன்பிறகு அவர்கள் குடும்பத்தைச் சந்திக்காமல், வீடியோ கால் மூலமாக மட்டுமே பேசி வருகிறார்கள். தங்களின் சொந்த விஷயங்கள் அனைத்தும் ஒதுக்கி வைத்துவிட்டு மக்களுக்காக நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றும் இந்த தம்பதியரைப் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
இதுகுறித்து பேசிய டாக்டர் இஷான் ரோஹத்கி, ''மார்ச் மாதத்திலிருந்து எங்கள் குடும்பத்தினர் யாரையும் பார்க்கவில்லை. வீடியோ கால் மூலமாக மட்டுமே பேசி வருகிறோம். அதன் மூலமாக மட்டுமே பாதுகாப்பாக இருங்கள் என ஒவ்வொருவருக்கும் சொல்லிக் கொள்கிறோம்'' எனக் கூறியுள்ளார். இதனிடையே இந்த இளம் தம்பதியரைப் பாராட்டிய நெட்டிசன்கள், தங்களின் காதலைச் சேவை மூலமாகவும் வெளிப்படுத்தியுள்ளார்கள் என நெகிழ்ந்துள்ளார்கள்.
மற்ற செய்திகள்