‘விஜய்சேதுபதி மீது வலுக்கும் விமர்சனங்கள்!’.. ட்ரெண்ட் ஆகும் #shameonvijaysethupathi ஹேஷ்டேக்.. ‘800’ பட தயாரிப்பு நிறுவனத்தின் ‘பரபரப்பு’ அறிக்கை!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமாக '800' (800 The Movie) என்கிற திரைப்படம் உருவாகவுள்ளது.சென்னை சூப்பர் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
ஆனால் இதுகுறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே இதில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்றும், முத்தையா முரளிதரன், சிங்கள ஆதரவாளர் என்றும் பல்வேறு தமிழ் ஆதரவு அமைப்பினர் மற்றும் இணையவாசிகள் #shameonvijaysethupathi என்கிற ஹேஷ்டேகின் கீழ் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே இதுகுறித்து பேசிய விஜய் சேதுபதி, முத்தையா முரளிதரன் மிகவும் போற்றத்தகுந்த, நேசிக்கத்தகுந்த அழகான மனிதர் அவரது கதை கண்டிப்பாக சொல்லப்பட வேண்டும் என புகழரம் சூட்டியிருந்தார்.
இந்நிலையில், இப்படத்தை தயாரிக்கும் மும்பை DAR MEDIA தயாரிப்பு நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், “முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறில் விஜய்சேதுபதி நடிக்க இருக்கும் 800 திரைப்படம் பல்வேறு வகையில் அரசியல் ஆக்கப்பட்டு வருவதை அறிகிறோம். 800 திரைப்படம் முழுக்க ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட படமே தவிர இதில் எந்தவித அரசியலும் கிடையாது. தமிழகத்திலிருந்து தேயிலைத் தோட்டக் கூலிகளாக இலங்கைக்கு குடிபெயர்ந்த ஒரு சமூகத்திலிருந்து வந்த முரளிதரன், எப்படி பல தடைகளை தாண்டி உலக அளவில் சிறந்த பந்து வீச்சாளராக உயர்ந்தார் என்பதுதான் இத்திரைப்படத்தின் கதையம்சம்.
இத்திரைப்படம் இளைய சமுதாயத்துக்கும் வருங்கால விளையாட்டு வீரர்களுக்கும் தங்கள் வாழ்க்கை பயணத்தில் எவ்வளவு தடைகள் வந்தாலும் தடைகளை கடந்து சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தும் படமாக இருக்கும். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளராக ஒன்றை மட்டும் நிச்சயமாக சொல்லமுடியும். இத்திரைப்படத்தில் ஈழத் தமிழர்களின் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் விதத்திலான காட்சியமைப்புகள் கிடையாது. கூடுதலாக, திரைப்படத்தில் இலங்கையை சேர்ந்த பல தமிழ் திரைத்துறை கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்குபெற இருக்கின்றனர்.
அதன்மூலம் இலங்கை தமிழ் திரைத்துறை கலைஞர்களுக்கு தங்கள் திறமையை உலக அரங்கில் வெளிக்காட்ட இந்த படம் நிச்சயமாக ஒரு அடித்தளமிட்டுத் தரும் என்பதை நாங்கள் முழுமையாக நம்புகிறோம். கலைக்கும் கலைஞர்களுக்கும் எல்லைகள் கிடையாது. எல்லைகளை கடந்து மக்களையும் மனிதத்தையும் இணைப்பதுதான் கலை. நாங்கள் அன்பையும் நம்பிக்கையையும் மட்டுமே விதைக்க விரும்புகிறோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்