"அதெல்லாம் தெரியாது.. என் அக்காவ அரெஸ்ட் பண்ணியே தீரணும்!".. போலீஸாரை நிறுத்தி புகார் அளித்த 8 வயது சிறுவன்.. காவல்நிலையம் வரவழைக்கப்பட்ட அக்கா!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா நேரத்தில் கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் கசாபா காவல் நிலையத்தில் நடந்த நிகழ்வு ஒன்று இந்த சூழலிலும் பலரையும் லேசாக சிரிக்க வைத்துள்ளது.
கசாபா காவல் நிலைய காவலர் ஒருவர் தன்னுடைய வேலை நேரம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்ததைப் பார்த்து ஓடோடி வந்த 8 வயது சிறுவன் ஒருவன் அவரை “போலீஸ் அங்கிள்” என அழைத்து அவரை நிறுத்தியுள்ளான். அப்போது அவரிடம் தான் ஆங்கிலத்தில் எழுதிவைத்திருந்த புகார் மனுவை சிறுவன் கொடுத்ததோடு, அந்த புகாரை விசாரித்து தன்னுடைய 10 வயது அக்காவையும் அவருடைய தோழிகளையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து காவலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளான்.
அந்த சிறுவனிடம் காவலர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காத அந்த சிறுவன், “என் புகார் மீது நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும்.. செய்வீர்களா? நீங்கள் செய்விர்களா?” என்கிற ரேஞ்சுக்கு கேட்டிருக்கிறான். அவரும் சிறுவனை உயரதிகாரியிடம் அழைத்து செல்ல, சிறுவனது அக்காவும் அவருடைய தோழிகளும் வரவழைக்கப்பட்டனர்.
அப்போது சிறுவனின் புகாரை விசாரித்ததில், “10 வயதே ஆன என் அக்காவும் அவருடைய 14,15,18 வயதான தோழிகளுடன் நான் விளையாடச் சென்றால் விரட்டிவிடுகிறார்கள். ஒருநாளும் அவர்கள் என்னை விளையாட்டில் சேர்ப்பதே இல்லை. அவர்கள் மட்டுமே விளையாடுவது மட்டுமல்லாமல் என்னைப் பார்த்து கேலி செய்து சிரிக்கவும் செய்கிறார்கள். அவர்களை நீங்கள் கைது செய்தே ஆகணும்!” என்று அழுது புரண்டு கூறிய சிறுவனை ஒருவழியாக சமாதானப்படுத்தியதோடு, சிறுவனின் அக்கா மற்றும் அவருடைய தோழிகளிடம் சிறுவனையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளச் சொல்லி போலீஸார் நிபந்தனை போட, அதற்கு அவர்கள் சம்மதித்தனர்.
அதன் பிறகு மகிழ்ச்சியுடன் சென்ற சிறுவன், “போலீஸ் அங்கிள் தேங்க்ஸ்” என்று கூறிய பின்னரே போலீஸார் நிம்மதியாகினர்.