அடுத்த வாரம் கல்யாணம்... அழைப்பிதழ் கொடுக்கப்போன குடும்பம்... அதிவேகத்தில் வந்த பேருந்தால்... கடுமையான பனி மூட்டத்தில் நிகழ்ந்த பயங்கரம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாராஜஸ்தான் மாநிலத்தில், திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு திரும்பி வேனில் வந்து கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர், பேருந்து மோதியதில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி மூட்டம் காணப்படுகிறது. இந்நிலையில், சுரு மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலை 11-ல் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, பிகானீரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர், அடுத்த வாரம் 19-ம் தேதி திருமணம் நடைபெறுவதை முன்னிட்டு, ரத்தன்கார்க்கில் உள்ள உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு வேனில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது ரஜல்தேசர்-பர்ஸ்னே இடத்தில் வந்து கொண்டிருந்த போது, பனிமூட்டத்தில் அதிவேகத்தில் வந்தப் பேருந்து, வேன் மீது பயங்கரமாக நேருக்கு நேர் மோதியது.
இதில், வேனில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பேருந்தில் பயணித்த 6 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அதிவேகத்தில் பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் மற்றும் பேருந்து உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஒரு வாரத்தில் திருமணம் நடைபெற உள்ளநிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.