10 வருசமா சம்பளமே எடுக்கல.. சில நேரங்களில் யாசித்தும் வாழ்ந்த துப்புரவு தொழிலாளி.. "வங்கியில் இத்தனை லட்சங்களா.?" - இறந்த பின் தெரியவந்த உண்மை!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தர பிரதேச மாநிலம், ப்ரயாக்ராஜ் என்னும் பகுதியை சேர்ந்தவர் தீரஜ். இவர் அப்பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
![10 வருசமா சம்பளமே எடுக்கல.. சில நேரங்களில் யாசித்தும் வாழ்ந்த துப்புரவு தொழிலாளி.. "வங்கியில் இத்தனை லட்சங்களா.?" - இறந்த பின் தெரியவந்த உண்மை!! 10 வருசமா சம்பளமே எடுக்கல.. சில நேரங்களில் யாசித்தும் வாழ்ந்த துப்புரவு தொழிலாளி.. "வங்கியில் இத்தனை லட்சங்களா.?" - இறந்த பின் தெரியவந்த உண்மை!!](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/70-lakhs-found-in-man-bank-account-who-survived-by-begging-thum.jpg)
தீராஜின் தந்தையும் அதே மருத்துவமனையில் தான் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். அவர் மரணம் அடைந்த பிறகு, அதே வேலை தீரஜுக்கும் கிடைத்துள்ளது.
சமீபத்தில் கூட தீரஜ் குறித்த செய்தி ஒன்று அதிகம் வைரலாகி இருந்தது. அதாவது தனது வங்கியில் இருந்து ஒரு முறை கூட சம்பள பணத்தை எடுக்காமலே இருந்து வந்துள்ளார் தீரஜ். முன்னதாக, இவரது தந்தையும் இதே போல வங்கியில் இருந்து சம்பள பணத்தையே எடுக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனால், தனது தந்தையை போலவே சாலையில் செல்லும் நபர்களிடம் யாசகம் செய்தும், நண்பர்களிடம் பணம் வாங்கியும் தனது வாழ்க்கை பிழைப்பையும் தீரஜ் பார்த்து வந்துள்ளார். அவரது தாய்க்கு தற்போது 80 வயதாகும் நிலையில், அவருக்கு வரும் பென்சன் பணம் கொண்டு தான் அந்த குடும்பமே ஓடி வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக இப்படியே தீரஜ் இருந்து வந்த நிலையில், தற்போது வெளிவந்துள்ள தகவல், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காசநோய் காரணமாக பாதிக்கப்பட்டு வந்த தீரஜ், சமீபத்தில் உயிரிழந்துள்ளார். அப்படி இருக்கையில், அவரது வங்கி கணக்கை அதிகாரிகள் சோதனை செய்து பார்த்த போது 70 லட்சம் ரூபாய் வரை அதில் இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இத்தனை ஆண்டுகள், வங்கிக் கணக்கில் இருந்து பணமே எடுக்காமல், யாசகம் உள்ளிட்ட வழிகள் மூலம் பிழைப்பு நடத்தி வந்த துப்புரவு தொழிலாளி இறந்த பின்னர் லட்சாதிபதியாக இருந்த விஷயம், பலரையும் மிரள வைத்துள்ளது. தீரஜ் குறித்து பேசும் அவரது நண்பர்கள், வங்கிக் கணக்கில் இருந்து அவர் பணமே எடுக்கமாட்டார் என்றும், நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பலரிடமும் பணம் பெற்று வாழ்வை கடத்தி வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
அதே போல, திருமணம் செய்து கொண்டால், அந்த பணத்தை பெண் எடுத்து சென்று விடுவார் என்பதால் திருமணமும் செய்யாமல் இருந்து வந்துள்ளார் தீரஜ். ஆனால், அதே வேளையில் ஆண்டு தோறும் அவர் வரி செலுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
வாழ்ந்த நாட்களில் பணத்தையே செலவாக்காமல், பின்னர் இறந்த பிறகு அவரது வங்கி கணக்கில் 70 லட்சம் வரை இருப்பது தொடர்பான செய்தி, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்