"படிப்பை விட்டு 22 வருஷம் ஆச்சு.." 45 வயதில் பத்தாவது பரீட்ச்சை எழுத சென்ற பெண்.. ரிசல்ட்டை பாத்துட்டு கொண்டாடிய கிராம மக்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅசாம் மாநிலத்தைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவர் தற்போது பத்தாம் வகுப்பு தேர்வெழுதி அதில் தேர்ச்சியும் பெற்றிருக்கிறார். இதனால் அந்த கிராமமே அவரை கொண்டாடிவருகிறது.
அசாம் மாநிலம் பிஸ்வநாத் மாவட்டத்தை சேர்ந்தவர் புல்புலி காதுன். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கின்றனர். 45 வயதான காதின் அங்கன்வாடி பணியாளராக இருக்கிறார். இந்நிலையில் தனது பலநாள் ஆசையான பத்தாவது தேர்ச்சி பெறவேண்டும் என்ற கனவை தற்போது நனவாக்கியுள்ளார் புல்புலி காதுன்.
குடும்ப சூழ்நிலை
குடும்ப சூழ்நிலை காரணமாக தன்னால் பத்தாவது கூட முடிக்க இயலவில்லை எனக்கூறும் இவர், "திருமணமாகிவிட்டதால் குடும்பத்தை கவனித்துக்கொள்ளவே நேரம் சரியாக இருந்தது. எனக்கு 3 குழந்தைகள். அவர்களை வளர்க்கும் பணி என்னை கல்வி நோக்கி சிந்திக்கவிடவில்லை" என்றார். இருப்பினும், அவ்வப்போது படிப்பை தொடரவேண்டும் என்ற ஆசை தனக்குள் எழுந்துகொண்டே இருந்ததாக சொல்கிறார் காதுன்.
இந்நிலையில், படிப்பினை நிறுத்தி 22 வருடங்கள் ஆன பின்னர் தற்போது 10வது பரீட்சை எழுத முடிவெடுத்திருக்கிறார் காதுன். இதனையடுத்து பிஸ்வநாத் காட் ஃபக்ருதீன் அலி அகமது உயர்நிலைப் பள்ளியில் பத்தாவது தேர்வை சமீபத்தில் எழுதியுள்ளார்.
நிறைவேறிய கனவு
வெளிவந்த தேர்வு முடிவுகளில் காதுன் தேர்ச்சியடைந்தது தெரியவரவே, அவரது கிராம மக்களே சந்தோஷத்தில் துள்ளி குதித்திருக்கின்றனர். இதுபற்றி பேசிய அவர்,"என்னுடைய 22 வருட கனவு தற்போது நிறைவேறியிருக்கிறது. மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன். எனக்கு நேரம் கிடைக்கும் வேளையில் படித்து இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். தொடர்ந்து படிக்க ஆசை. இளங்கலை பட்டம் பெறுவதே எனது குறிக்கோள். அதற்காக தொடர்ந்து படிக்க இருக்கிறேன்" என்றார்.
வயது தடையில்லை
தன்னைப்போலவே கல்வியை பாதியிலேயே நிறுத்திய பெண்கள் தொடர்ந்து படிக்க தன்னால் ஆன உதவிகளை செய்ய இருப்பதாக கூறும் காதுன்," படிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை. மனத்திருந்தால் நம்மால் எதனையும் சாதிக்க முடியும். இந்த வயதில் கல்வியை தொடர்வதா? என கூச்சம் தேவையில்லை. நம்முடைய இலக்கு உயர்ந்ததாக இருக்கவேண்டும்" என்கிறார்.
45 வயதில் 10வது தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற புல்புலி காதுனுக்கு வாழ்த்துக்கள் குவிந்துவருகின்றன.
மற்ற செய்திகள்