‘கடத்தப்பட்ட 4 வயது சிறுவன்’... 'அதிரடியாக மீட்ட போலீஸ்'... பெற்றோரிடம் ஒப்படைத்த நெகிழ்ச்சி வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திராவில் இரண்டு நாட்களுக்கு முன் கடத்தப்பட்ட 4 வயது சிறுவன், பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நெகிழ்ச்சி சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மந்த்பேட்டாவில், வங்கி அதிகாரிகளான வெங்கட்ரமணா, நாகவள்ளி தம்பதியினர், தனது பெற்றோருடன் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 வயதில் ஜஷீத் என்ற ஆண் குழந்தை உள்ளது. கடந்த திங்கள்கிழமையன்று மாலை, தனது வீட்டில் பாட்டியுடன் இருந்தபோது, அங்கு முகமூடி அணிந்து பைக்கில் வந்த மர்மநபர்கள் இருவர், பாட்டியை தாக்கிவிட்டு சிறுவன் ஜஷீத்தை கடத்திச் சென்றனர்.
உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சிறுவன் கடத்தல் தொடர்பாக, 7 படைகளை அமைத்த போலீசார், கிழக்கு கோதாவரி முழுவதும் தேடி வந்தனர். சிறுவன் கடத்தல் தொடர்பாக 2 நாட்களாகியும், எந்தவித கோரிக்கையும் வராததால், சிறுவன் கடத்தல் செய்தி வேகமாக பரவியது. சிறுவனின் பெற்றோர், சிறுவனது புகைப்படத்தை வெளியிட்டு ‘Save Jashith’ என்று சமூகவலைத்தளத்தில் பதிவிட்டனர். இந்நிலையில், குத்துகுலுரு என்ற கிராமத்தில் செங்கல் சூளை அருகே, சிறுவனை கடத்தல்காரர்கள் விட்டுச்சென்றனர்.
தகவலறிந்த போலீசார், சிறுவனை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். திட்டமிட்டு குழந்தையை கடத்தியிருப்பது தெரியவந்தாலும், கடத்தல்காரர்களை பற்றிய எந்தவித தகவலும் கிடைக்காததால் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். துரிதமாக செயல்பட்டு 60 மணி நேரத்தில், பத்திரமாக சிறுவனை மீட்ட போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன. இதற்கிடையில் சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.