'4 மாத குழந்தை மரணம்...' 'கொரோனா எப்படி பரவுச்சுன்னே தெரியல...' குழப்பத்தில் மருத்துவர்கள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மஞ்சேரி என்ற பகுதியை சேர்ந்த தம்பதியின் 4 மாத குழந்தை கொரோனா தொற்றால் இறந்த செய்தி கேரளாவையே துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிறந்ததிலிருந்தே குழந்தைக்கு இதய சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்ததாகவும், குழந்தைக்கு நிமோனியா இருந்தது எனவும் மருத்துவ வட்டாரங்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் குழந்தைக்கு கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக முதலில் மஜேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் குழந்தைக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறால் ஏற்பட்டதால் ஏப்ரல் 21 ஆம் தேதி கேரளாவின் கோழிக்கோடு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார்.
நேற்று கொரோனா தொற்றிற்கான பரிசோதனை நடத்தப்பட்டதை அடுத்து குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் 4 மாத குழந்தை இன்று காலை கோழிக்கோடு மருத்துவமனையில் தன் உயிரை இழந்ததாக மலப்புரம் மாவட்ட மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.
மேலும் இவரது பெற்றோருக்கும் கொரோனா வைரஸிற்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டு முடிவுக்காக காத்துக்கொண்டுள்ளனர்.
வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த அவரது உறவினர்களில் ஒருவருக்கு இதற்கு முன்பே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் குழந்தையுடன் நேரடி தொடர்பில் இல்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் குழந்தைக்கு எப்படி கொரோனா தொற்று பரவியது என்பது மருத்துவ குழுவை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் குழந்தைக்கு சிகிச்சையளித்த மஞ்சேரியில் உள்ள இரண்டு மருத்துவமனைகளைச் சேர்ந்த ஐந்து மருத்துவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
4 மாத குழந்தையின் இறப்பு கேரளாவில் பதிவான மூன்றாவது கோவிட்-19 மரணம் ஆகும்