விவசாய நிலத்தில் கிடைத்த 2-ம் நூற்றாண்டு ‘அதிசய’ பொருள்.. ஆய்வின் முடிவில் தெரியவந்த அடுத்த ஆச்சரியம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாவிவசாய நிலத்தை தோண்டும் போது இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த விநாயகர் சிலை கிடைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள பொதுகுண்டு தின்னே அருகே, அம்மாநில முன்னாள் அமைச்சர் என்.ரகுவீர ரெட்டிக்கு சொந்தமான விவசாய நிலம் தோண்டப்பட்டுள்ளது. அப்போது சுடுமண்ணால் செய்யப்பட்ட வித்தியாசமான பொருள் ஒன்று கிடைத்துள்ளது. மேலும் பார்ப்பதற்கு விநாயகர் முகம் போன்று இருந்ததால் தொல்பொருள் ஆய்வாளர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தொல்பொருள் ஆய்வாளர்கள், விவசாயிகள் கண்டெடுத்த பொருளை ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில் அது, சதவாகன காலத்தைச் சேர்ந்த சுடுமண் பொருள் என்றும், இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் கண்டறிந்துள்ளனர். தென்னிந்தியாவில் கிடைத்த மிகப்பழமையான விநாயகர் சிலை இதுதான் என சொல்லப்படுகிறது.
இதுதொடர்பாக பேசிய விஜயவாடா கலாச்சார மையத்தின் தலைமை செயல் அதிகாரி சிவநாகி, ‘இந்த சிலையின் தலை யானை உருவத்தைக் கொண்டிருக்கிறது. இதனை கையாலேயே செதுக்கி உருவாக்கியுள்ளனர். இது சதவாகன கால மக்களின் சிறப்புகளில் ஒன்று. களிமண்ணால் சிலையை உருவாக்கி அதை நெருப்பில் வாட்டி வடிவமைத்துள்ளனர். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக மண்ணில் புதைந்திருந்ததால் சிலையின் காது, கை, கால்கள் சேதமடைந்துள்ளன’ என அவர் கூறினார்.
கடந்த 1980-ம் ஆண்டு குர்னூல் மாவட்டம் வீராபுரத்தில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதுவும் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்