தெலுங்கானாவில் ப்ளஸ் 1, 2 தேர்வு முடிவு குளறுபடி! 19 மாணவ, மாணவர்கள் தற்கொலை?
முகப்பு > செய்திகள் > இந்தியாஇண்டர்மீடியட் எனப்படும் 11, 12-ம் வகுப்பு தேர்வு முடிவு குளறுபடியால், 19 மாணவர்கள் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவில் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில், இண்டர்மீடியட் எனப்படும், 11 மற்றும் 12-ம் வகுப்பைச் சேர்ந்த மொத்தம் 9 லட்சத்து 74 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். மாணவர்களின் விடைத்தாள்களை திருத்த தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது. இந்தத் தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் 18-ம் தேதி வெளியிடப்பட்டன.
தேர்வு எழுதியவர்களில் 3 லட்சத்து 28 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி அடையவில்லை என அறிவிக்கப்பட்டது. தேர்ச்சி மதிப்பெண்ணுக்கான, மொத்த மதிப்பெண் ஆயிரத்துக்கு 750 முதல் 900 வரை மதிப்பெண்கள் பெற்றும் மாணவ, மாணவிகள் தேர்வுபெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதை தாங்கி கொள்ள முடியாத மாணவர்கள் 10 பேர், தேர்வு முடிவுக்கு அடுத்தநாளே தற்கொலை செய்துக் கொண்டனர். மேலும் 9 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலையில் ஈடுபட்டனர். இது தெலுங்கானா மாநிலத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. பெற்றோர்கள், எதிர்க்கட்சிகள் என பல்வேறு தரப்பினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தேர்ச்சி பெறாத மாணவர்களின் விடைத்தாள்கள் அனைத்தையும் எவ்வித கட்டணமும் இன்றி மறுமதிப்பீடு செய்ய முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார். கல்வித்துறை அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி தெலுங்கு தேசம், காங்கிரஸ், இடதுசாரிகள், தெலுங்கானா ஜன சமிதி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் ஆளுநர் நரசிம்மனை சந்தித்து மனு அளித்தனர். தற்போது தெலுங்கானா கல்வித் துறையில் இந்தப் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.