துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை.. எதிர்த்த மாணவி மீது ஆசிட் வீச்சு.. உயிருக்கு போராடும் 11-ம் வகுப்பு மாணவி!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாலியல் வன்கொடுமையை எதிர்த்து போராடிய, 17 வயது மாணவி மீது ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தின் பஹல்பூர் மாவட்டத்தில், 11-ம் வகுப்பு படிக்கும், 17 வயது பெண் மற்றும் அவரது தாயார், நேற்றிரவு வீட்டுக்குள் இருந்துள்ளனர். அப்போது பக்கத்து வீட்டு நபரான பிரின்ஸ் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் அதிரடியாக வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.
மாணவியின் தாயாரை துப்பாக்கியை வைத்து மிரட்டிய குற்றவாளிகள், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளனர். அப்போது மாணவி அதனை எதிர்த்து கடுமையாக போராடி தப்பித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் மாணவி மீது ஆசிட் வீசிவிட்டு சென்றனர். ஆசிட் வீசியதில் மாணவி மோசமாக காயமடைந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவி பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் தற்போது உயிருக்கு போராடி வருகிறார். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளியான பிரின்ஸ் பீகார் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.