‘தோழியை காப்பாற்றப்போய்’... ‘லண்டனில் கே.எஃப்.சி. முன்பு’... ‘சிறுவனுக்கு நடந்த கொடூரம்’... ‘பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்’!
முகப்பு > செய்திகள் > இந்தியாலண்டனில் பட்டப்பகலில் கே.எஃப்.சி உணவகம் முன்பு, 17 வயது சிறுவன் ஓட ஓட விரட்டி, கத்தியால் குத்திக் கொலை செய்யப்படும் திடுக்கிடும் காட்சிகள் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
லண்டனில் யூசுஃப் கரீம் ஹசான் அல் பேஜனி என்ற 17 வயது சிறுவன், அங்குள்ள வெஸ்ட்மின்ஸ்டர் கல்லூரியில், தொழிற்படிப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த செவ்வாயக்கிழமையன்று மதியம், எட்ஜ்வேர் சாலையில், தனது தோழியுடன் கல்லூரிக்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது தனது தோழியை கிண்டல் செய்த ஒரு கும்பலிடம் இருந்து, அவரை யூசுஃப் காப்பாற்றினார். இதையடுத்து ஆத்திரமடைந்த அந்த கும்பல், அடுத்த அரை மணி நேரத்தில், சாலையில் ஓட ஓட அந்த சிறுவனை சரமாரியாகக் கத்தியால் குத்தினர்.
அங்குள்ள கே.எஃப்.சி. உணவகத்தின் முன்பு நடைப்பெற்ற இந்தச் சம்பவத்தின்போது, மதிய உணவுக்காக வரிசையில் காத்திருந்த வாடிக்கையாளர்கள், இதனைக் கண்டு அதிர்ந்தனர். ஆனாலும் ஒருவரும் தடுக்க முன்வரவில்லை. இதனையடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரத்தவெள்ளத்தில் மிதந்த அந்த சிறுவனை, அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். சிறுவனை குத்திய காட்சிகள் அனைத்தும், கே.எஃப்.சி.உணவகத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதனைக் கொண்டு சிறுவனை குத்தி கொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். லண்டனில் மட்டும், இந்த வருடத்தின் துவக்கத்தில் இருந்து, நடைபெறும் 105-வது படுகொலை இது என, அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் கடந்த 9 நாட்களில் நடந்த 7-வது கொலையாகவும் இது இருப்பதாக, அங்குள்ள குற்ற அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சம்பவத்தன்று சிறுவன் கல்லூரிக்கு செல்ல மறுத்ததாக கூறப்பட்டநிலையில் நடந்த இந்த சம்பவம், சிறுவனின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.