"என் வாழ்க்கையில இப்படி ஒரு கொடூரத்தை பார்த்ததில்ல..." – இறந்த பின்னரும் பலாத்காரம்... வெடிக்கும் இன்ஸ்பெக்டர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாராஜஸ்தான் மாநிலத்தின் பண்டி மாவட்டத்தில் உள்ள மலைவாழ் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் 3 சிறுவர்களால் கூட்டு பாலியல் வன்முறை செய்யப்பட்டதால் உயிரிழந்ததாகத் தெரிகிறது. கொடூரத்தின் உச்சமாக அவர் உயிரிழந்த பிறகும் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மலைவாழ் சிறுமி
ஆடுமேய்க்கச் சென்ற 16 வயது சிறுமி சிறுநீர் கழிப்பதற்காக, மறைவான இடத்திற்குச் சென்றிருக்கிறார். வெகுநேரம் ஆகியும் அச்சிறுமி திரும்ப வராததால் சந்தேகமடைந்த அவரது தோழி தேடத் தொடங்கியிருக்கிறார். அப்போதுதான் அந்த கோர காட்சியைப் பார்த்துள்ளார்.
புதர் ஒன்றின் அருகே ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அவரது தோழி ஓடிச்சென்று ஆட்களை உதவிக்கு அழைத்திருக்கிறார். உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படவே, விரைந்துவந்த போலீசார் விசாரணையைத் துவங்கினர்.
நடுங்க வைக்கும் பிரேத பரிசோதனை அறிக்கை
உயிரிழந்த சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பியிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை இந்தியாவெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அந்த அறிக்கையின்படி சிறுமியின் அந்தரங்க உறுப்பில் 30 க்கும் மேற்பட்ட காயங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுமி, தனக்கு இழைக்கப்பட்ட வன்கொடுமையை எதிர்த்து போராடுகையில் அவர் தாக்கப்பட்டிருப்பதும் தெரியவந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சிறுமி உயிரிழந்த பின்பும் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக அந்த பிரதே பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோரத்தின் உச்சம்
இந்நிலையில் காவல்துறை நடத்திய விசாரணையில் 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் ஜெய் யாதவ் பேசுகையில், “என் வாழ்நாளில் இதுபோன்ற ஒரு கொடூரத்தை கண்டதில்லை. சிறுமி இறந்த பின்பும் கூட 3 சிறுவர்களும் பாலியல் பலாத்காரத்தை செய்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் அவர்கள் சிறுமியை தாக்கியிருப்பதற்கும் பிரேத பரிசோதனை அறிக்கையில் ஆதாரங்கள் உள்ளன. ஆகவே இந்த சிறுவர்களுக்கு எதிராக யாரும் ஆஜராக மாட்டோம் என வழக்கறிஞர் சங்கமும் முடிவெடுத்துள்ளது” என்றார்.
மற்ற செய்திகள்