‘என் ஏரியால 15 பேருக்கு கொரோனா இருக்கு!’.. ‘வாட்ஸ்-ஆப்பில் வந்த தகவல்.. பெண் செய்த பரபரப்பு காரியம்!’
முகப்பு > செய்திகள் > இந்தியாவாட்ஸ் அப்பில் கொரோனா வைரஸ் பரவல் குறித்த போலி தகவல்களை பரப்பியதாக பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கொல்கத்தா நியூ அலிபூர் பகுதி உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரானா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை உண்டாக்கி வரும் நிலையில் அதிகமாக பரவி கொண்டிருப்பவை போலி செய்திகளும் வதந்திகளும். குறிப்பாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் உண்மை நிலை, கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, கொரோனா இதைச் சாப்பிட்டால் சரியாகும், அதை சாப்பிட்டால் சரியாகும் என்பன போன்ற தகவல்கள் உள்ளிட்ட பலவும், ஆதாரப்பூர்வமற்ற பல வதந்திகளும் வாட்ஸ்அப் வழியே சென்று பலரிடம் சேர்கின்றன.
இவற்றில் உண்மை எது? பொய் எது? என்று ஒவ்வொரு மக்களும் தடுமாறும் சூழ்நிலையில் 30 வயதுக்கும் சற்று கூடுதலான பெண் ஒருவர் கடந்த ஞாயிறு அன்று வாட்ஸ் ஆப்பில் வதந்தி பரப்பியதால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர், தான் இருக்கும் பகுதியில் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகவும் இதனை மாநில அரசு மறுப்பதாகவும் தனது வாட்ஸ் ஆப்பில் பதிவிட்டுள்ளார்.
இதுபற்றி அந்த பகுதியில் இருந்த சிலர் அந்த பெண் குறித்து அப்பகுதி போலீசாரிடம் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் விரைந்து சென்று அப்பெண்ணை கைது செய்துள்ளதாக கொல்கத்தா நியூ அலிபூர் பகுதி உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.