கோவிஷீல்டு 2-வது டோஸ் செலுத்துவதில் இந்த மாற்றத்தை செய்யலாமா?.. மத்திய அரசு சொன்ன ‘புதிய’ யோசனை..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇரண்டாவது டோஸ் போட்டு கொள்வதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பது தொடர்பாக மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் (Covaxin), சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் கோவிஷீல்டு (Covishield) ஆகிய இரண்டு தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த இரண்டு தடுப்பூசிகளையும் 2 டோஸ்களாக செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் தடுப்பூசிக்கான தேவை அதிகரித்துள்ளது. இதில் 45 வயதுக்கு மேற்பட்டோரில் பலர் இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருக்கின்றனர். சிலர் முதல் டோஸ் போட்டுக் கொண்டு இரண்டாவது டோஸ்-க்காக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் 18 வயது முதல் 44 வயது வரையிலான மக்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. இதனால் போதிய இருப்பு இல்லாமல் இந்த திட்டத்தை பல்வேறு மாநில அரசுகள் ஒத்தி வைத்திருக்கின்றன. மேலும் இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசிகளில் இரண்டாவது டோஸிற்காக காத்திருக்கும் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்டுக் கொள்வதற்கான கால அவகாசத்தை 12 முதல் 16 வாரங்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்க தடுப்பூசி பயன்பாட்டை நிர்வகிக்கும் தேசிய நிபுணர் குழுவிற்கு, மத்திய அரசின் நோய் எதிர்ப்பு சக்திக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (NTAGI) பரிந்துரை செய்துள்ளது. தற்போது கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடுவதற்கான கால அவகாசம் 4 முதல் 8 வாரங்களாக உள்ளது.
கொரோனாவிலிருந்து குணமாகும் நபர்கள், குணமாகி 6 மாதத்துக்கு பின் தடுப்பூசி எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படலாம் என்பதையும் ஆலோசனை குழுவினர் வலுயுறுத்தி உள்ளனர். இதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதி தரும்பட்சத்தில் இந்த இடைவெளி நீட்டிப்பும், குணமானோருக்கு தடுப்பூசி அளிப்பதும் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.
மேலும் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பாகவும், பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி போடுவதற்கான தடையை நீக்குவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டதாக தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவினர் கூறியுள்ளனர். அதேவேளையில் தடுப்பூசியின் டோசேஜ் அளவு தொடர்பாக எந்த மாற்றத்தையும் ஆலோசனைக் குழு பரிந்துரைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்