தொழில் போட்டி.. கடன் சுமை.. இந்தியாவை விட்டு வெளியேறும் 'பிரபல' நிறுவனம்?

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

இந்தியாவை பொறுத்தவரையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் என்றாலே வோடபோன், ஏர்டெல், ஜியோ இந்த மூன்றும் தான் மக்கள் மனதில் தோன்றும். அந்தளவு இந்திய மக்களின் அன்றாட வாழ்க்கையோடு இந்த நிறுவனங்கள் பின்னி பிணைந்துள்ளன.

தொழில் போட்டி.. கடன் சுமை.. இந்தியாவை விட்டு வெளியேறும் 'பிரபல' நிறுவனம்?

இந்தநிலையில் தொடர்ந்து அதிகரிக்கும் கடன் சுமை, வாடிக்கையாளர்கள் இழப்பு, ஜியோவின் போட்டி போன்ற காரணங்களால் வோடபோன் நிறுவனம் இந்திய நாட்டைவிட்டு வெளியேறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எந்த நேரத்திலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தொலைத்தொடர்பு வட்டாரங்களில் கூறப்படுகிறது.

ஏர்டெல், வோடபோன் ஐடியா, ஜியோ மற்றும் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள், மத்திய டெலிகாம் துறை கோரிய 92,642 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.

இதன்படி வோடபோன் ஐடியா நிறுவனம் 28,308 கோடி ரூபாய் செலுத்த வேண்டி இருக்கும் என்று கூறப்படுகிறது. உச்ச நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பு ஏற்கனவே நீடித்த கட்டணப் போர்களையும், அதிக கடன் சுமையையும் எதிர்த்துப் போராடும் சுமைகளை இன்னும் அதிகமாக்கியுள்ளது.

இதுதவிர ஐடியா நிறுவனத்தை இணைத்த வகையிலும் வோடபோன் நிறுவனத்திற்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். ஐடியா நிறுவனத்தை வாங்கியதற்காக இந்திய அரசுக்கு தகுந்த கட்டணங்களை வோடபோன் செலுத்தவில்லையாம். எல்லாவற்றுக்கும் மேலாக கடன்காரர்களின் நிலுவைத்தொகையையும் சரியாக செட்டில்மெண்ட் செய்யவில்லையாம்.

இதுகுறித்து உச்ச நீதிமன்றம் சமீபத்தில் விசாரித்தபோது எல்லாவற்றுக்கும் விரைவில் முடிவு கட்டப்படும் என்று வோடபோன் தெரிவித்ததாம். இது தொலைத்தொடர்பு நிறுவனங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.இந்த தகவல் உண்மையா? என ஐஏஎன்எஸ் (IANS) செய்தி நிறுவனம் வோடபோனிடம் கேட்க, அதற்கு அவர்கள் இன்னும் பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.