'மச்சி, உனக்கென்ன ஒரே ஜாலி தான்'... '6 மாதத்தில் 2-வது சம்பளம் மற்றும் பதவி உயர்வு'... மற்ற 'ஐடி' நிறுவனங்களை வாயடைத்து போகவைத்த பிரபல ஐடி நிறுவனம்!
முகப்பு > செய்திகள் > வணிகம்உங்கள் நண்பர்கள் யாராவது இந்த நிறுவனத்தில், வேலை செய்தால் நீங்கள் நிச்சயமாக 'மச்சி, உனக்கென்ன ஒரே ஜாலி தான்' என கண்டிப்பாகக் கேட்கலாம்.
கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் தொழில் துறை மட்டுமல்லாது சேவை, ஐடி எனப் பல நிறுவனங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டது. அந்த பாதிப்பு ஊழியர்களின் சம்பளம் மற்றும் பதவி உயர்விலும் எதிரொலித்தது. ஒரு சிலர் வேலையிழக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டார்கள்.
இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய ஐ.டி நிறுவனமான டிசிஎஸ் (டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ்) கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொடுக்க வேண்டிய சம்பள உயர்வு, கோவிட் காரணமாகக் கொடுக்க முடியவில்லை. அதனால் அந்த சம்பள உயர்வு கடந்த அக்டோபரில் அறிவிக்கப்பட்டது.
தற்போது, ஆறு மாதங்களில் இரண்டாவது சம்பள உயர்வை அறிவித்திருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் சம்பள உயர்வை அறிவித்திருந்த நிலையில், தற்போது புதிய சம்பள உயர்வை அறிவித்திருக்கிறது. இந்த சம்பள உயர்வு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. டிசிஎஸ் நிறுவனத்தின் அனைத்துப் பிரிவுகளில் மற்றும் நாடுகளில் பணியாற்றுபவர்களுக்கும் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வுகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
கடந்த அக்டோபர் மாதம் 6 முதல் 8 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. தற்போது நிச்சயமற்ற சூழல் குறைந்திருப்பதால் வழக்கமான காலத்தில் இந்த ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. புதிய சம்பள உயர்வு சராசரியாக 12% முதல் 14 சதவீதம் வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தவிர, ஒவ்வொரு ஆண்டும் நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப பதவி உயர்வுகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன என டிசிஎஸ் தெரிவித்திருக்கிறது.
இந்த நிறுவனத்தில் 4.7 லட்சம் பணியாளர்கள் உள்ள நிலையில், டிசிஎஸ்யின் இந்த அறிவிப்பு அதன் ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, மற்றொரு ஐடி நிறுவனமான அசென்சர் (Accenture) ஒரு வார அடிப்படை சம்பளத்தை போனஸாக அறிவித்திருக்கிறது. கடினமான காலகத்தில் உழைத்தற்காக இந்தப் பரிசு என நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதன் மூலம் 2 லட்சம் பணியாளர்கள் பயன் அடைவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அடுத்த நிதி ஆண்டுக்கான சம்பள உயர்வை டிசிஎஸ் தொடங்கி வைத்திருக்கும் நிலையில், 6 மாதத்தில் இரண்டாவது முறையாகச் சம்பள உயர்வு அளிக்கப்பட்டிருப்பது மற்ற ஐடி நிறுவனங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதோடு மற்ற நிறுவனங்களும் ஊதிய உயர்வை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பை அதன் ஊழியர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்