ஊரடங்கில் ‘செம’ லாபம் பார்த்த ‘நெட்பிளிக்ஸ்’.. 'Money Heist' மட்டுமில்ல ‘இதையும்’ ரொம்ப பேர் பாத்திருக்காங்க..!
முகப்பு > செய்திகள் > வணிகம்நெட்பிளிக்ஸ் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த 3 மாதங்களில் ஒன்றே முக்கால் கோடி அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை மே மாதம் 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வெளியே செல்ல முடியாததால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் டிவி, செல்போன் போன்றவற்றில் அதிகமாக பொழுதை கழிக்கின்றனர்.
இந்த நிலையில் ஆன்லைன் ஒளிபரப்பு நிறுவனமான நெட்பிளிக்ஸ்-ன் (Netflix) வாடிக்கையாளர் எண்ணிக்கை கடந்த 3 மாதத்தில் ஒன்றே முக்கால் கோடி அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 3 மாதங்களில் 709 மில்லியன் டாலர் (5,388 கோடி ரூபாய்) வருமானம் வந்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகம் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் நெட்பிளிக்ஸின் ஒட்டுமொத்த வருமானம் 28 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பதால் ரியாலிட்டி ஷோக்கள், சீரியஸ் மற்றும் சினிமா பார்ப்பதில் அதிக நேரத்தை செலவிடுவதாக நெட்பிளிக்ஸ் தெரிவித்துள்ளது. இதில் குறிப்பாக 'Tiger king' என்ற டாக்குமெண்டரி, 'Love is Blind' என்ற ரியாலிட்டி ஷோ மற்றும் 'Money Heist' என்ற திரில்லர் சீரியஸ்ஸை மக்கள் அதிகமாக பார்த்துள்ளதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.