மாஸ்டடோன் தளத்துக்கு படையெடுத்த நெட்டிசன்கள்.. அப்படியென்ன ஸ்பெஷல் இருக்கு அதுல.?

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

ட்விட்டர் நிறுவனத்தை உலகத்தின் டாப் பணக்காரரான எலான் மஸ்க் கைப்பற்றிய நிலையில், மாஸ்டடோன் எனும் தளத்திற்கு நெட்டிசன்களிடையே வரவேற்பு அதிகரித்துவருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மாஸ்டடோன் தளத்துக்கு படையெடுத்த நெட்டிசன்கள்.. அப்படியென்ன ஸ்பெஷல் இருக்கு அதுல.?

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றியதில் இருந்து உயர்மட்ட அதிகாரிகளை பணிநீக்கம் செய்தது, நிர்வாக அதிகாரிகளின் குழுவை கலைத்தது என மஸ்க் குறித்த பல பரபரப்பான தகவல்கள் வெளியாகி வந்தன. இதனிடையே, ட்விட்டரில் verified badge எனப்படும் அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு மாதம் 8 அமெரிக்க டாலர்கள் கட்டணமாக செலுத்த வேண்டும் என மஸ்க் அறிவித்திருந்தார்.

இது ஒருபக்கம் இருக்க, மாஸ்டடோன் எனும் தளம் நெட்டிசன்களிடையே பிரபலமாகி வருகிறது.  இதுகுறித்து அந்த தளத்தை உருவாக்கியவரும் அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான யூஜென் ரோச்கோ தனது  மாஸ்டடோன் பக்கத்தில்," அக்டோபர் 27 அன்று எலான் மஸ்க் ட்விட்டரின் பொறுப்பை ஏற்றுக்கொண்டதில் இருந்து,  மாஸ்டடோன் 489,003 புதிய பயனர்களை ஈர்த்திருக்கிறது. மொத்த மாதாந்திர செயலில் உள்ள பயனர்களின் எண்ணிக்கை 1 மில்லியனுக்கும் அதிகமாகியுள்ளது. இதற்கு முன்னர்  மாஸ்டடோனுக்கு இத்தனை பயனர்கள் வந்ததில்லை" எனக் குறிப்பிட்டிருந்தார். ட்விட்டரின் தினசரி செயலில் உள்ள பயனர்களின் (daily active users) எண்ணிக்கை 238 மில்லியன் ஆகும். இந்நிலையில், மாஸ்டடோன் தளத்திற்கு மக்களிடையே ஆர்வம் அதிகரித்துவருவதாக தெரிகிறது.

மாஸ்டடோனை பொறுத்தவரையில் அதுவும் ட்விட்டரை போன்றே செயல்படும் தளம் தான். கடந்த 2016 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்த இந்த தளம் 82 மொழிகளில் இயங்கிவருகிறது. இந்த தளத்தில் கணக்கை உருவாக்க பயனர்கள் 18 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டுமாம். அதனுடன் பிற சமூக வலை தளங்களை போலவே, மின்னஞ்சல் முகவரி மூலம் இந்த தளத்தில் கணக்கை உருவாக்கிட முடியும்.

இதில், பயனர்கள் தங்களுக்கான சர்வர்களை தேர்வு செய்யவேண்டும். இந்த தளத்தில் பயனர்கள் தாங்கள் பின்பற்றும் நபர்களுடைய பதிவுகளை மட்டுமே பார்க்க முடியும். தேவைப்பட்டால் சர்வர்களை மாற்றிக்கொள்ள்ளும் வசதியும் இதில் இருப்பதாக தெரிகிறது. அதே நேரத்தில் இந்த சர்வர்களை சுயசார்பு அமைப்புகள் அல்லது தனிநபர்கள் நிர்வகித்து வருகின்றனர். ஒவ்வொரு சர்வர்களின் கொள்கைகளும் மாறுபடுகின்றன. இதனிடையே கடந்த வாரம் மட்டும்  சுமார் 2.3 லட்சம் பயனர்கள் புதிதாக இந்தத் தளத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருப்பது இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

TWITTER, MASTODON, ELON MUSK

மற்ற செய்திகள்