ட்விட்டர் டீல் விவகாரத்துல திடீர்னு எலான் மஸ்க் எடுத்த முடிவு.. யாருமே இந்த டிவிஸ்டை எதிர்பார்த்திருக்க மாட்டாங்க..!
முகப்பு > செய்திகள் > வணிகம்உலகின் மிகப்பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எலான் மஸ்க்
அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். பின்னர் அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் வாங்க இருப்பதாக அறிவித்திருந்த வேளையில் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அந்த நிறுவனத்தை முழுவதுமாக வாங்க முன்வந்தார் மஸ்க்.
போலி கணக்குகள்
ட்விட்டர் நிறுவனம் கைமாறும் பணிகள் நடைபெறுவதாக சொல்லப்பட்டுவந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தினை வாங்கும் முயற்சியை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவித்திருந்தார் எலான் மஸ்க். மேலும், ட்விட்டர் தளத்தில் ஸ்பாம் மற்றும் போலி கணக்குகளின் எண்ணிக்கை 5 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
அதைத் தொடர்ந்து போலி கணக்குகளின் விபரங்களை ஒப்படைக்காவிட்டால் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் திட்டத்தை முழுவதுமாக கைவிட நேரிடும் என எச்சரித்திருந்தார். ஆனால், போலி கணக்குகளின் விபரங்களை ட்விட்டர் நிறுவனம் வெளியிடாததால் அந்நிறுவனத்தை வாங்கும் முடிவை நிரந்தரமாக கைவிடுவதாக அறிவித்தது எலான் தரப்பு. இதனை தொடர்ந்து, எலான் மஸ்க் மீது வழக்கு தொடர்ந்தது ட்விட்டர் நிறுவனம். இந்த மனு மீதான விசாரணை அக்டோபர் 17 ஆம் தேதி துவங்கி 5 நாட்கள் நடைபெறும் என நீதிமன்றம் அறிவித்திருக்கிறது.
எதிர்வழக்கு
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவு வெளிவந்த சில மணிநேரங்களில் ட்விட்டர் நிறுவனத்தின் மீது எதிர்வழக்கு தொடுத்திருக்கிறார் எலான் மஸ்க். இதுதொடர்பாக 164 பக்க ஆவணம் நீதிமன்றத்தில் எலான் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இது இன்னும் பொதுவெளிக்கு வரவில்லை என்றாலும், விரைவில் நீதிமன்ற திருத்தங்களுடன் இந்த ஆவணம் வெளியிடப்படும் என தெரிகிறது.
ட்விட்டர் நிறுவனம் எலான் மீது வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், அந்நிறுவனத்தின் மீது எலான் எதிர்வழக்கு தொடுத்திருப்பது உலகம் முழுவதும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
மற்ற செய்திகள்