ட்விட்டரை கைப்பற்றினாரா எலான் மஸ்க்..? முதல் வேலையா இந்தியரான ட்விட்டர் CEO நீக்கமா.? பரபரப்பு தகவல்கள்..!
முகப்பு > செய்திகள் > வணிகம்உலகின் மிகப்பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். கடந்த ஏப்ரல் மாதத்தில் ட்விட்டர் நிறுவனம் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்தால் ஒரு பங்கை 54.20 அமெரிக்க டாலர் கொடுத்து வாங்க தயார் என்றும் மொத்த விற்பனை தொகையையும் பணமாகவே அளிப்பதாகவும் மஸ்க் தெரிவித்திருந்தார். 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முன்வந்தார் மஸ்க்.
ட்விட்டர் நிறுவனம் கைமாறும் பணிகள் நடைபெறுவதாக சொல்லப்பட்டுவந்த நிலையில் ட்விட்டர் தளத்தில் போலி கணக்குகள் மற்றும் ஸ்பாம்கள் அதிகமாக இருப்பதாகவும் இதுகுறித்த தகவல்களை அந்நிறுவனம் வெளியிடவில்லை என்றும் கூறிய மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை நிரந்தரமாக கைவிடுவதாக கடந்த ஜூலையில் அறிவித்திருந்தார். இதனை எதிர்த்து ட்விட்டர் நிறுவனம் வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கு விசாரணை இன்னும் சில வாரங்களில் துவங்க இருந்தது.
இதனிடையே சமீபத்தில், ட்விட்டர் நிறுவனத்தை வாங்க மஸ்க் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும், இதுதொடர்பாக கடிதம் ஒன்று ட்விட்டர் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதை நிரூபிக்கும் வகையில், மஸ்க் தரப்பின் கடிதம் தங்களுக்கு கிடைத்ததாகவும், ஒரு பங்குக்கு $54.20 என்ற பரிவர்த்தனையை முடிப்பதே தங்களுடைய நோக்கம் எனவும் ட்விட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.
இதுதொடர்பாக, டெலாவர் நீதிமன்றம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க மஸ்க்கிற்கு அவகாசம் அளித்திருந்தது. இந்நிலையில், எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும், ட்விட்டர் நிறுவனத்தின் CEO பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் பதவிகளில் இருந்தவர்களை மஸ்க் பணிநீக்கம் செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. மேலும், தலைமை நிதி அதிகாரி நெட் செகல் மற்றும் சட்ட விவகாரங்கள் மற்றும் கொள்கைத் தலைவர் விஜயா காடே ஆகியோரையும் மஸ்க் பணிநீக்கம் செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
முன்னதாக, நேற்று ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயலகத்திற்கு மஸ்க் சென்றிருந்தார். அங்குள்ள முக்கிய அதிகாரிகளை அவர் சந்தித்து பேசும் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாகின. இதனையடுத்து அவர் தனது ட்விட்டர் பயோவை 'Chief Twit' எனவும் மாற்றியுள்ளார். நேற்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்" பணத்திற்காக நான் ட்விட்டரை வாங்கவில்லை. நான் பெரிதும் நேசிக்கும் மனிதகுலத்திற்கு உதவ முயற்சிக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது பற்றி எவ்வித அறிவிப்பையும் மஸ்க் தரப்பு இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்