நேத்து மகனுக்கு... இன்னைக்கு மகளுக்கு.. வாரிசுகளுக்கு முக்கிய பதவியை அளித்த முகேஷ் அம்பானி..!
முகப்பு > செய்திகள் > வணிகம்பிரபல டெலிகாம் நிறுவனமான ஜியோவின் சேர்மேனாக முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி நேற்று தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், தனது மகள் ஈஷா அம்பானிக்கு முக்கிய பொறுப்பை முகேஷ் அம்பானி அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான முகேஷ் அம்பானி கடந்த 2016 ஆம் ஆண்டு ஜியோ தொலைத்தொடர்பு சேவை நிறுவனத்தை துவங்கினார். குறைந்த கட்டணத்தில் இணைய சேவை வழங்கியதன் பலனாக கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை ஜியோ நிறுவனம் ஈர்த்தது. தொடர்ந்து பல வர்த்தக நடவடிக்கைகளையும் ஜியோ மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்தின் சேர்மேன் பொறுப்பில் இருந்து விலகிக்கொள்வதாக அம்பானி நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து அவரது மகன் ஆகாஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ குழுமத்தின் சேர்மேனாகவும், நிர்வாகமற்ற இயக்குநராகவும் (Non Executive Director) ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
வாரிசுகளுக்கு பதவி
கடந்த ஆண்டு முதலே முகேஷ் அம்பானி தனது வாரிசுகளுக்கு நிர்வாக பொறுப்பை வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இதற்காக ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி, ஆனந்த் அம்பானி ஆகியோருக்கு தனித்தனி அலுவலகம், நிர்வாக அணி ஆகியவை அமைக்கப்பட்டன. இந்நிலையில், ரிலையன்ஸ்-ன் ஜியோ நிறுவனம் அவரது மகன் ஆகாஷ் அம்பானிக்கு வழங்கப்படலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துவந்தனர்.
ரிலையன்ஸ் குழுமத்தின் மொத்த மதிப்பு 17 லட்சம் கோடிகளாகும். இவற்றை பராமரிக்கும் பொறுப்பில் தனது வாரிசுகளான ஈஷா மற்றும் ஆகாஷ் ஆகியோரை கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஈடுபடுத்தி வருகிறார் முகேஷ் அம்பானி. இந்நிலையில், ஆகாஷ் அம்பானிக்கு ஜியோ குழுமத்தின் சேர்மேன் பொறுப்பு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஈஷா அம்பானியை சில்லரை வர்த்தக நிறுவனமான ரிலையன்ஸ் ரீடெய்ல் பிரிவின் சேர்மேனாக்க முகேஷ் அம்பானி முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது ரிலையன்ஸ் ரீடெயில் வென்சர்ஸ்-ன் இயக்குநராக ஈஷா அம்பானி இருந்து வருகிறார், அடுத்ததாக அவர் தலைவராக உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 30 வயதாகும் ஈஷா அம்பானி, யேல் பல்கலைக்கழகத்தில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் ஜியோவை ஆகாஷ் அம்பானியும், ரீடெய்ல் பிரிவை ஈஷாவும் வழிநடத்தினாலும் இவற்றின் தாய் நிறுவனமான ரிலையன்ஸ் குழுமத்தின் இயக்குனராக முகேஷ் அம்பானியே தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read | பிளாஸ்டிக் குப்பைகளை கொடுத்தா.. இலவசமா சாப்பாடு கொடுக்கும் உணவகம்..இது செம்ம ஐடியாவா இருக்கே..!
மற்ற செய்திகள்