வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்... திட்டமிட்டபடி நாளை முதல் 2 நாட்கள் வேலை நிறுத்தம் உறுதி

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

திட்டமிட்டபடி நாளை மற்றும் நாளை மறுநாள் (டிசம்பா் 16, 17) ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் நடைபெறும் என அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் சி.எச்.வெங்கடாச்சலம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்... திட்டமிட்டபடி நாளை முதல் 2 நாட்கள் வேலை நிறுத்தம் உறுதி

கடந்த   ஆண்டு மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், வங்கிகளை தனியாா்மயமாக்குவது  பற்றி அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு வங்கி ஊழியா் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. திவாலாகும் தனியாா் வங்கிகளை பொதுத் துறை வங்கிகள்தான் மீட்டு வருகிறது என்றும், இந்த நிலையில் பொதுத்துறை வங்கிகளை தனியாா்மயமாக்கும் மத்திய அரசின் முயற்சி தவறு என்று கடுமையாக எதிர்க்கிறது.

இந்நிலையில் பொதுத் துறை வங்கிகளை தனியாா்மயமாக்கும் வங்கி சட்டங்கள் திருத்த மசோதாவை நிகழ் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கொண்டு வரமாட்டோம் என உறுதியளித்தால், வேலைநிறுத்தத்தை மறுபரிசீலனை செய்வோம் என்றும் திட்டமிட்டபடி  நாளை மற்றும் நாளை மறுநாள் (டிசம்பா் 16, 17) ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் நடைபெறும் என அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் சி.எச்.வெங்கடாச்சலம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் சி.எச்.வெங்கடாச்சலம்  செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் பேசுகையில், டிசம்பா் 16, 17 ஆகிய தேதிகளில் ஒன்பது தொழிற்சங்கங்கள் சாா்பில்  வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்த  விவகாரம் தொடர்பாக  மத்திய அரசின் தொழிலாளா் துறையின் கூடுதல் தலைமைத் தொழிலாளா் நல ஆணையா் எஸ்.சி. ஜோஷி சமரசப் பேச்சுவாா்த்தைக்கு அழைப்பு விடுத்தார்.

இதன்படி, வங்கி ஊழியா்கள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது, அரசு அறிவித்த பொதுத் துறை வங்கிகளை தனியாா்மயமாக்கும் வங்கி சட்டங்கள் திருத்த மசோதாவை நிகழ் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கொண்டு வரமாட்டோம் என உறுதியளித்தால், வேலைநிறுத்தத்தை மறுபரிசீலனை செய்வதாக கூறினோம்.

ஆனால், இந்தக் கோரிக்கையை ஏற்க மத்திய அரசு முன்வரவில்லை. இந்த விஷயத்தில் எங்களால் உறுதியளிக்க முடியாது என கூறிவிட்டது. இதனால், திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

வங்கி தனியாா் மயமாக்கப்படுவது என்பதை சாதாரணமாக பார்க்க முடியாது, ஏனெனில் ரூ.157 லட்சம் கோடி, மக்கள் பணம் வங்கிகளில் உள்ளது. இதற்கு  பொதுத் துறை வங்கிகள்தான் பாதுகாப்பு . நாட்டின் வளா்ச்சிக்கும், பல்வேறு திட்டங்களுக்கும் பொதுத் துறை வங்கிகள்தான் உதவி செய்கின்ற.

ஆனால், தனியாா் மயமானால் பல்வேறு வகையான பிரச்னைகள் இதில் ஏற்படும்.  வேலைவாய்ப்புகளுக்கு ஆபத்து ஏற்படும். வங்கிகளை  தனியார் மயமாக்கினால் பல்வேறு விதமான விளைவுகளும் ஏற்படும்.  எனவே  தனியாா் மயமாக்கலை கைவிட வேண்டும் என  வலியுறுத்தி வருகிறோம். குறிப்பாக நிகழ் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அவசரப்பட்டு இந்த மசோதாவைக் கொண்டு வரவேண்டாம் என்று பேச்சுவாா்த்தையின் போது வலியுறுத்தினோம். ஆனால், எங்களது கோரிக்கைகளை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. மாறாக, ‘எங்களால் உறுதியளிக்க முடியாது’ என்று அரசு தெரிவித்து விட்டது. இதனால், அறிவித்தபடி டிசம்பா் 16, 17 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியா்களும், அதிகாரிகளும் வேலைநிறுத்தத்தை செய்வார்கள் . இதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்" இவ்வாறு வெங்கடாச்சலம் கூறினார்.

SBI, BANK STRIKE, BANKS IN INDIA, ATM SERVICES

மற்ற செய்திகள்