இந்தியாவில் ஆன்லைன் மூலம் பொருட்கள் விற்பனை செய்துவந்த அமேசான் நிறுவனம், அடுத்த அதிரடியாக, புதிய துறையில் களமிறங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் சேவை அதிவேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் அந்தத் துறையில், மிகவும் கடுமையான போட்டி நிலவுகிறது. ஆன்லைன் ஃபுட் டெலிவரி செயலிகளை, பெரும்பாலும் நடுத்தர மக்களே பயன்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அமெரிக்க நிறுவனமான அமேசான், இந்தியாவில் உள்ளூர் நிறுவனமான இன்ஃபோசிஸ் நாரயணமூர்த்தியின் கேட்டமரன் உடன் இணைந்து, ஆன்லைன் உணவு டெலிவரி சேவையைத் தொடங்க உள்ளது.
மேலும், ஏற்கனவே சரிவில் உள்ள ஆன்லைன் டெலிவரி நிறுவனமான ஊபர் ஈட்ஸை வாங்கவும், அமேசான் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எலக்ட்ரானிக்ஸ், செல்போன் உட்பட வீட்டுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்துவரும் அமேசான் நிறுவனம், தற்போது ஆன்லைன் உணவு டெலிவரியிலும் கால்பதிக்க முடிவெடுத்துள்ளது.
மேலும், இந்தியாவில் செப்டம்பர் மாதம் முதல் பண்டிகை நாட்கள் ஆரம்பமாகும் என்பதால், அந்த மாதமே உணவு டெலிவரி சேவையை தொடங்கவும் அமேசான் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் ஸ்விகி, ஜொமேட்டோ, உபேர் ஆகிய நிறுவனங்கள் முன்னணி இடத்தில் உள்ளன. அமேசானும் ஆன்லைன் உணவு டெலிவரி துறையில் இறங்கும்பட்சத்தில், போட்டிகள் அதிகம் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.