ரூ.8 லட்சம் கோடி திட்டம்.. சிங்கப்பூரை விட பெரிய இடம்.. மீட்டிங்கில் கவுதம் அதானி சொல்லிய பிளான்.. திகைத்துப்போன தொழில்துறை ஜாம்பவான்கள்..!
முகப்பு > செய்திகள் > வணிகம்மாற்று எரிசக்தி துறையில் 8 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரும் தொழிலதிபருமான கவுதம் அதானி தெரிவித்திருக்கிறார்.
கவுதம் அதானி
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 1962 ஆம் ஆண்டு பிறந்தவர் கவுதம் அதானி. இவருடைய பெற்றோர் சாந்திலால் அதானி - சாந்தி ஆவர். உள்ளூரிலேயே பள்ளிக் கல்வியை முடித்த கவுதம் அதானி, குஜராத் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பிரிவில் சேர்ந்தார். ஆனால், இரண்டாம் ஆண்டே கல்லூரியை விட்டுவிட்டு பணிக்குச் சென்றுவிட்டார். துணி வியாபாரம் செய்துவந்த தனது தந்தையை அருகிலிருந்து பார்த்து வளர்ந்த அதானி 1988 ஆம் ஆண்டு அதானி எக்ஸ்போர்ட்ஸ் எனும் ஏற்றுமதி நிறுவனத்தை துவங்கினார். இதுவே, இன்று உலகளவில் பிரபலமான அதானி குழுமமாக வளர்ந்து நிற்கிறது. IIFL Wealth Hurun India Rich List 2022 ன் படி இந்திய பணக்காரரின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் அதானி. இவருடைய சொத்துமதிப்பு 10,94,400 கோடி ரூபாய் ஆகும்.
முதலீடு
சிங்கப்பூரில் கடந்த 26 மற்றும் 27 ஆம் தேதி குளோபல் 2022 என்னும் மாநாடு நடைபெற்றது. இதில் உலகெங்கிலும் உள்ள முதன்மை செயல் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் பேசிய அதானி," இந்த மாநாடு 3 ஆண்டுகளுக்கு பிறகு நேரடியாக நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த 36 மாதங்களில் உலகம் சவாலான சூழ்நிலையை எதிர்கொள்ளும் என யாரும் கணித்திருக்க முடியாது. 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தேவையும் உற்பத்தியும் அதிகரித்திருக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் மாற்று எரிசக்தி மற்றும் டேட்டா துறையில் 8 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய இருக்கிறோம். இதில் 70 சதவீதம் மாற்று எரிசக்தி துறையில் முதலீடு செய்யப்படும். எரிசக்திக்கு அடுத்தபடியாக இந்தியாவில் ஏற்றம் பெற்றுவரும் டேட்டா துறையிலும் ஈடுபட இருக்கிறோம்" என்றார்.
தற்போதைய நிலையில் மரபுசாரா எரிசக்தி துறையில் 20 கிகாவாட் ஆற்றலை உருவாக்கிவரும் நிலையில், இது 45 கிகாவாட்டாக உயர்த்த இருப்பதாகவும் இதற்கு பயன்படுத்த இருக்கும் நிலம் சிங்கப்பூர் நாட்டை விட பெரியதாக இருக்கும் எனவும் அதானி குறிப்பிட்டிருந்தார். இது உலக அளவில் தொழில்துறை ஜாம்பவான்களையே திகைக்க வைத்திருக்கிறது.
மற்ற செய்திகள்